ஈரோடு இடைத்தேர்தல்: ஜிகே வாசனுடன் அதிமுக மூத்த தலைவர்கள் இன்று சந்திப்பு
|தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜிகே வாசனை அதிமுக மூத்த தலைவர்கள் சந்தித்து பேச உள்ளனர். காலை 11 மணியளவில் இந்த சந்திப்பு நடைபெற உள்ளது.
சென்னை,
ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. திருமகன் ஈவெரா (வயது 46), உடல்நலக்குறைவால் கடந்த 4-ந்தேதி மரணம் அடைந்தார். இதையடுத்து ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி காலியானது. ஒரு தொகுதி காலியாகிறபோது, 1951-ம் ஆண்டின் மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின்படி அங்கு 6 மாதங்களுக்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும்.
இதனால் ஈரோடு இடைத்தேர்தலில் விரைவில் தேர்தல் நடத்தப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. அதன்படி, நேற்று மூன்று மாநில சட்டப்பேரவை தேர்தல் தேதியை அறிவித்த தேர்தல் ஆணையம் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தேதியையும் அறிவித்தது. அதன்படி, இந்த தொகுதிக்கான தேர்தல் பிப்ரவரி 27-ந் தேதி நடைபெறுகிறது. இதற்கான வேட்பு மனுத்தாக்கல் வருகிற 31-ந் தேதி தொடங்குகிறது.
ஈரோடு கிழக்கு தொகுதியில் திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள காங்கிரஸ் கட்சியே மீண்டும் போட்டியிடும் என்ற பேச்சு நிலவுகிறது. அதேபோல், அதிமுக கூட்டணியில் இடம் பெற்ற தமிழ்மாநில காங்கிரஸ் கட்சியே இடைத்தேர்தலில் போட்டியிடக்கூடும் என்ற எதிர்பார்ப்பு நிலவருகிறது. தமிழ்மாநில காங்கிரஸ் சார்பில் யுவராஜா மீண்டும் போட்டியிடலாம் எனக்கூறப்படும் நிலையில், இன்று தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜிகே வாசனை அதிமுக மூத்த தலைவர்கள் சந்தித்து பேச உள்ளனர். காலை 11 மணியளவில் இந்த சந்திப்பு நடைபெற உள்ளது. இந்த சந்திப்பில் இடைத்தேர்தல் தொடர்பாக ஆலோசிக்கப்படுகிறது.