ஈரோடு: தாயை இழந்து 2 மாதங்களாக தவிக்கும் குட்டி யானை
|குட்டி யானையை முதுமலை முகாமுக்கு கொண்டு செல்ல வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
ஈரோடு,
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பண்ணாரி அருகே புதுகுய்யனூரில் கடந்த ஏப்ரல் மாதம் 11-ந் தேதி 40 வயது மதிக்கத்தக்க ஒரு பெண் யானை உடல்நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்தது. அப்போது அந்த யானையின் அருகே நின்றிருந்த அதன் குட்டியானை பாசப்போராட்டம் நடத்தியது.
இதைத்தொடர்ந்து வனத்துறையினர் குட்டி யானையை மற்ற யானைகளோடு சேர்த்து விட்டனர். ஆனால் அந்த குட்டியானையை மற்ற காட்டு யானைகள் கூட்டத்தில் சேர்க்காமல் துரத்தி விட்டன. இதனால் தனித்து விடப்பட்ட குட்டியானை கடந்த 2 மாதங்களாக உணவு கூட கிடைக்காமல் தளர்ந்து மெலிந்தநிலையில் காணப்படுகிறது.
இதனை அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் தங்கள் செல்போன்களில் புகைப்படம் எடுத்து வருகின்றனர். இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறும்போது, 'தாயை இழந்து உணவின்றி தவிக்கும் குட்டி யானைக்கு உணவளித்து முதுமலை வளர்ப்பு யானைகள் முகாமுக்கு அனுப்பி வைக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.