< Back
மாநில செய்திகள்
சமத்துவ பொங்கல் விழா கொண்டாட்டம்; அப்துல்வகாப் எம்.எல்.ஏ. பங்கேற்பு
திருநெல்வேலி
மாநில செய்திகள்

சமத்துவ பொங்கல் விழா கொண்டாட்டம்; அப்துல்வகாப் எம்.எல்.ஏ. பங்கேற்பு

தினத்தந்தி
|
15 Jan 2023 12:21 AM IST

நெல்லையில் தி.மு.க. சார்பில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இதில் அப்துல்வகாப் எம்.எல்.ஏ. பங்கேற்றார்.

நெல்லையில் தி.மு.க. சார்பில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இதில் அப்துல்வகாப் எம்.எல்.ஏ. பங்கேற்றார்

அப்துல் வகாப் எம்.எல்.ஏ.

நெல்லை மத்திய மாவட்ட தி.மு.க. சார்பில் நெல்லை வண்ணார்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில் நேற்று சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. மத்திய மாவட்ட செயலாளர் அப்துல் வகாப் எம்.எல்.ஏ. தலைமை தாங்கி பொதுமக்களுக்கும், நிர்வாகிகளுக்கும் பொங்கல் மற்றும் இனிப்பு வழங்கினார். தொடர்ந்து கரகாட்டம், ஒயிலாட்டம் உள்ளிட்ட கண்கவர் நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

விழாவில் முன்னாள் எம்.பி. வசந்தி முருகேசன், நெல்லை மாநகராட்சி துணைமேயர் கே.ஆர்.ராஜூ, மாவட்ட துணை செயலாளர் எஸ்.வி.சுரேஷ், மாநகர துணைச்செயலாளர்கள் சுதா மூர்த்தி, மூளிகுளம்பிரபு, மண்டல தலைவர்கள் பிரான்சிஸ், ரேவதிபிரபு, மகேசுவரி, கவுன்சிலர்கள் பவுல்ராஜ், கோகுலவாணி, ஒன்றிய செயலாளர் அன்பழகன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

நகர்மன்ற மேல்நிலைப்பள்ளி

நெல்லை சந்திப்பு மீனாட்சிபுரம் நகர்மன்ற மகளிர் மேல்நிலைப்பள்ளியில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. தலைமையாசிரியை மேபெல்ராணி தலைமை தாங்கினார். ஆசிரியர்கள், மாணவிகள் பொங்கலிட்டு இனிப்பு வழங்கினார்கள். மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது.

இந்த பள்ளி மாணவிகள் கலைத்திருவிழாப் போட்டியில் செவ்வியல் குழு நடனத்தில் மாநில அளவில் முதல் இடம்பெற்று முதல்-அமைச்சரிடம் சான்றிதழும் கேடயமும் பெற்று வந்தனர். அவர்களை பள்ளி தலைமையாசிரியை மேபெல்ராணி மற்றும் ஆசிரியர்கள், பள்ளி மேலாண்மைக்குழு, பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர் பாராட்டி மகிழ்ந்தனர்.

நெல்லை சந்திப்பு சரணாலயத்தில் நேற்று சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. சரணாலய இயக்குனர் ஜான்தினகர் தலைமை தாங்கினார். இதில் டாக்டர் பன்னீர்செல்வம், தொழிலதிபர் ஹரி, மயன் ரமேஷ் ராஜா, மகேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர். சரணாலய குழந்தைகளின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது.

மாநகராட்சி அலுவலகம்

நெல்லை மாநகராட்சி அலுவலகத்தில் பொங்கல் திருவிழா கொண்டாடப்பட்டது. மேயர் சரவணன், மாநகராட்சி ஆணையாளர் சிவகிருஷ்ணமூர்த்தி ஆகியோர் தலைமையில் அலுவலக ஊழியர்கள், கவுன்சிலர்கள் மற்றும் தூய்மை பணியாளர்கள் இணைந்து பொங்கலிட்டு மகிழ்ந்தனர். தொடர்ந்து சிறுவர் சிறுமிகளின் பரதநாட்டியம், சிலம்பம் உள்ளிட்ட பாரம்பரிய கலைநிகழ்ச்சிகளும் நடைபெற்றது. பொதுமக்கள் மற்றும் அலுவலக ஊழியர்களுக்கு கரும்பு, பொங்கல் வழங்கப்பட்டது.

விழாவில் செண்டை மேளம் இசைக்கப்பட்டது. மேலப்பாளையம் மண்டல உதவி கமிஷனர் ஜஹாங்கீர் பாஷா செண்டை மேளம் இசைத்தார். உற்சாக மிகுதியில் சுகாதார அலுவலர் இளங்கோ உள்ளிட்ட பல்வேறு அதிகாரிகள் நடனம் ஆடினர். விழாவில் நகர்நல அலுவலர் டாக்டர் சரோஜா, உதவி ஆணையாளர்கள் வெங்கட்ராமன், சொர்ணலதா, காளிமுத்து, டிட்டோ, உதவி செயற்பொறியாளர்கள் லெனின், பைஜூ, ராமசாமி, சுகாதார அலுவலர்கள் சாகுல்அமீது, இளங்கோ, முருகேசன், சுகாதார ஆய்வாளர்கள் பாலசுப்பிரமணியன், பெருமாள், சங்கரநாராயணன், சங்கரலிங்கம், முருகன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

பா.ஜனதா

நெல்லை வண்ணார்பேட்டை பத்துப்பாட்டு தெருவில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் "நம்ம ஊர் மோடி பொங்கல் விழா" நடைபெற்றது. விழாவுக்கு நெல்லை மண்டல தலைவர் மலையரசன் தலைமை தாங்கினார். நெல்லை மாவட்ட செயலாளர் மேகநாதன், மருத்துவ பிரிவு மாவட்ட செயலாளர் அமுதவல்லி மற்றும் நிர்வாகி ஆர்யா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பாலாமடை பஞ்சாயத்தில் நடந்த பொங்கல் விழாவுக்கு, பஞ்சாயத்து தலைவர் சுப்புலட்சுமி இசக்கி தலைமை தாங்கினார். துணை தலைவர் இசக்கியம்மாள், சுகந்தா தேவி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினர்களாக நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ. துணை போலீஸ் சூப்பிரண்டு ஆனந்தராஜ், நெல்லை சந்திப்பு பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்க தலைவர் கட்டளை அன்பு, மயில் பாலசுப்பிரமணியன், மும்பை தொழில் அதிபர் அங்கப்பன் ஆகியோர் கலந்துகொண்டனர். விழாவில் கடந்த ஆண்டு 10, 12-ம் வகுப்பு தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ-மாணவிகள் மற்றும் பொங்கல் விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு தங்க பதக்கம் வழங்கப்பட்டது. தொடர்ந்து கயிறு இழுத்தல், கபடி உள்பட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

சேவியர் பள்ளி

பாளையங்கோட்டை சேவியர் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. கலைமனைகளின் அதிபர் ஹென்றி ஜெரோம் தலைமையில் 3,500 மாணவர்கள் சேர்ந்து 63 பானைகளில் பொங்கலிட்டு மகிழ்ந்தனர். தாளாளர் குழந்தைராஜ், தலைமை ஆசிரியர் அகஸ்டின் ஜான் பீட்டர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழ் ஆசிரியர் பால் கதிரவன் 'தழைக்கட்டும் தமிழர் பொங்கல்' என்ற தலைப்பில் கவிதை வாசித்தார். விழாவில் ஆசிரியர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்