நாமக்கல்
மாவட்டத்தில்சமத்துவ பொங்கல் விழா கொண்டாட்டம்
|நாமக்கல் மாவட்டத்தில் பல்வேறு ஊராட்சிகளில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.
சமத்துவ பொங்கல் விழா
பரமத்திவேலூர் தாலுகா, கபிலர்மலை ஊராட்சி ஒன்றியம், கபிலக்குறிச்சி ஊராட்சி மன்ற அலுவலகத்தில் சமத்துவ சுகாதார பொங்கல் விழா நடைபெற்றது. விழாவிற்கு ஊராட்சி மன்ற தலைவர் வடிவேல் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் குணவதி முன்னிலை வைத்தார். ஊராட்சி செயலர் பிரபாகரன் வரவேற்றார். சிறப்பு விருந்தினர்களாக வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பரமசிவம், துரைசாமி ஆகியோர் கலந்து கொண்டு பொங்கல் விழாவை தொடங்கி வைத்தனர். அதனைத் தொடர்ந்து ஊராட்சி மன்ற தலைவர் வடிவேல் சமத்துவ பொங்கல் விழாவில் கலந்து கொண்ட சுமார் 200-க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு அவரது சொந்த நிதியில் இருந்து தலா ஒரு கிலோ அளவு கொண்ட வெல்ல பாக்கெட்டை வழங்கினார். பின்னர் அனைவருக்கும் சர்க்கரை பொங்கல் வழங்கப்பட்டது. சமத்துவ பொங்கல் விழாவில் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், மகளிர் சுய உதவிக்குழுவினர், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
இதேபோல் பரமத்திவேலூர் தாலுகா, கபிலர்மலை வட்டார வளர்ச்சி அலுவலக வளாகத்தில் சமத்துவ சுகாதார பொங்கல் விழா நடைபெற்றது. விழாவிற்கு ஒன்றிய குழு தலைவர் ஜே.பி.ரவி தலைமை தாங்கினார். துணைத் தலைவர் யாதோசெல்வராஜ் முன்னிலை வகித்தார். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பரமசிவம், துரைசாமி ஆகியோர் அனைவரையும் வரவேற்றனர். சமத்துவ பொங்கல் விழாவை முன்னிட்டு நடைபெற்ற கோலப்போட்டியில் வெற்றி பெற்ற மகளிர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. பின்னர் அனைவருக்கும் சர்க்கரை பொங்கல் வழங்கப்பட்டது. விழாவில் கபிலர்மலை ஊராட்சி ஒன்றிய துணை வட்டார வளர்ச்சி அலுவலர் (நிர்வாகம்) நாகராஜ், ஒன்றியக் குழு உறுப்பினர்கள், மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
புதுப்பாளையம்
பள்ளிபாளையம் ஒன்றியம் புதுப்பாளையம் ஊராட்சியில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. விழாவுக்கு மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் செந்தில், பள்ளிபாளையம் ஒன்றிய பெருந்தலைவர் தனலட்சுமி செந்தில் ஆகியோர் முன்னிலையில் தைப்பொங்கல் விழா பொங்கல் வைத்து சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் புதுப்பாளையம் ஊராட்சி மன்ற தலைவர் ரவி, துணைத் தலைவர் சந்திரா, ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்
இதேபோல் கொல்லிமலை ஊராட்சி ஒன்றியம் அரியூர் நாடு ஊராட்சியில் உள்ள தெம்பளம் கிராமத்தில் ஊராட்சி நிர்வாகத்தின் சார்பில் பொங்கல் திருவிழா, சுகாதார பொங்கல் மற்றும் சமத்துவ பொங்கல் விழா நடந்தது. நிகழ்ச்சிக்கு ஊராட்சி மன்ற தலைவர் நாகலிங்கம் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் சங்கீதா மகேந்திரன், ஒன்றிய கவுன்சிலர் தனுஷ்கோடி சுப்பிரமணியம், வாழவந்தி நாடு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் பள்ளி குழந்தைகளின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. முன்னதாக தன்னார்வ தொண்டு அலுவலர் செந்தில் ராஜா பேசும்போது தொற்றுநோய் சம்பந்தமாக விழிப்புணர்வுடன் எவ்வாறு இருக்க வேண்டும் என்பது குறித்து பேசினார். ரெயில்வே துறையில் ஓய்வு பெற்ற அலுவலர் குழந்தான், ஊர்கலிங்கம்பட்டி தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் மோகன், ஊராட்சி செயலாளர் செல்வராசு உள்பட பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
எருமப்பட்டி
எருமப்பட்டி பேரூராட்சியில் சமத்துவ பொங்கல் விழா பேரூராட்சி அலுவலகத்தில் கொண்டாடப்பட்டது. பேரூராட்சி தலைவர் பழனியாண்டி தலைமை தாங்கினார். செயல் அலுவலர் சக்திவேல் முன்னிலை வகித்தார். இவ்விழாவில் பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் ஜே.ஜே.ரவி மற்றும் வார்டு கவுன்சிலர்கள், அலுவலக பணியாளர்கள், தூய்மைப் பணியாளர்கள், துப்புரவு பணியாளர்கள், டேங்க் ஆபரேட்டர்கள் மற்றும் பொதுமக்கள் விழாவில் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் பேரூராட்சி தலைவர் பழனியாண்டி அனைத்து துப்புரவு தூய்மை பணியாளர்களுக்கும் பொங்கல் பரிசாக ரூ.1000 ஆயிரம் வழங்கினார். செயல் அலுவலர் மற்றும் வார்டு கவுன்சிலர்கள் மற்றும் பொதுமக்களுக்கு மஞ்சள் பையின் மகத்துவத்தை விளக்கி மஞ்சள் பையை அனைவருக்கும் வழங்கினா்.
இதேபோல் எருமப்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பொங்கல் விழா ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் சங்கீதா தலைமையில் நடைபெற்றது. இவ்விழாவில் எருமப்பட்டி வட்டார வளர்ச்சி அலுவலர்கள், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஒன்றிய கவுன்சிலர்கள், அலுவலக பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
வெங்கரை பேரூராட்சி
பரமத்திவேலூர் தாலுகா, வெங்கரை பேரூராட்சியில் புகையில்லா பொங்கல் பண்டிகை கொண்டாடுவது குறித்து உறுதிமொழியேற்பு மற்றும் பொங்கல் விழா நடைபெற்றது. இதில் புகையில்லா பொங்கல் பண்டிகையை கொண்டாடும் வகையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. முன்னதாக வெங்கரை பேரூராட்சி அலுவலகம் முன்பு பேரூராட்சி தலைவர் விஜி என்கிற விஜயகுமார், செயல் அலுவலர் சீனிவாசன், துணைத் தலைவர் ரவீந்தர் ஆகியோர் முன்னிலையில் பேரூராட்சி பணியாளர்கள் மற்றும் தூய்மை பணியாளர்கள் உறுதி மொழி எடுத்துக்கொண்டனர். பின்னர் பேரூராட்சி அலுவலகம் வளாகம் முன்பு பொங்கல் வைத்து பூஜை செய்யப்பட்டு அனைவருக்கும் சர்க்கரை பொங்கல் வழங்கப்பட்டது. விழாவில் வெங்கரை பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள், பேரூராட்சி பணியாளர்கள், தூய்மை பணியாளர்கள் மற்றும் சுய உதவிக் குழுவினர் கலந்து கொண்டு புகையில்லா பொங்கல் கொண்டாடுவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.