அதிமுக பொதுக்குழு வழக்கு: சுப்ரீம் கோர்ட்டில் எடப்பாடி பழனிசாமி கேவியட் மனு
|அதிமுக பொதுக்குழு தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் எடப்பாடி பழனிசாமி கேவியட் மனு தாக்கல் செய்துள்ளார்.
புதுடெல்லி
கடந்த ஜூலை 11 ஆம் தேதி எடப்பாடி பழனிசாமி தரப்பு நடத்திய அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லும் என்று சென்னை ஐகோர்ட்டின் இரு நீதிபதிகள் அடங்கிய அமர்வு தீர்ப்பளித்தது. சென்னை ஐகோர்ட்டின் இந்த தீர்ப்பு ஓ பன்னீர் செல்வம் தரப்புக்கும் பெரும் பின்னடைவாக அமைந்தது. இதையடுத்து, சென்னை ஐகோர்ட்டின் தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்யப்போவதாக ஓபிஎஸ் அறிவித்து இருந்தார்.
இதற்கான வேலைகளில் அவரது தரப்பு வழக்கறிஞர்கள் ஈடுபட்டுள்ளனர். நாளை சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்ய இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கில் எடப்பாடி பழனிசாமி சுப்ரீம் கோர்ட்டில் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளார். அதில், பொதுக்குழு தொடர்பாக வழக்கு தொடர்ந்தால் தங்கள் தரப்பு வாதத்தை கேட்காமல் உத்தரவு பிறப்பிக்கக்கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.