"மாயமான் இல்லையென்றால் ஈ.பி.எஸ் முதல்-அமைச்சராக ஆகியிருக்க முடியாது" - வைத்திலிங்கம் கண்டனம்
|எடப்பாடி பழனிசாமியால் அதிமுக அழிவுப்பாதைக்கு சென்று கொண்டிருக்கிறது என்று ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்திலிங்கம் கூறியுள்ளார்.
சென்னை,
டிடிவி தினகரன் - ஓ.பன்னீர்செல்வம் சந்திப்பு மாயமானும், மண் குதிரையும் ஒன்று சேர்ந்தது போல் தான் உள்ளது என எடப்பாடி பழனிசாமி விமர்சித்த நிலையில் அதற்கு ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்திலிங்கம் பதிலடி கொடுத்துள்ளார்.
இது தொடர்பாக வைத்திலிங்கம் கூறியதாவது:-
"ஒபிஎஸ், டிடிவி தினகரன், சசிகலாவை தவிர்த்து அதிமுக ஆட்சி அமைக்க முடியாது. ஓபிஎஸ், டிடிவி தினகரனுக்கு மட்டுமே அதிமுக தொண்டர்களின் ஆதரவு உள்ளது. எடப்பாடி பழனிசாமிக்கு இரண்டு சதவீத வாக்குகள் கூட இல்லை. தடித்த வார்த்தையால் தகுதியை மீறி எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளார். பண்ருட்டி ராமச்சந்திரன் கிளைச் செயலாளராகக் கூட தகுதி இல்லாதவர் என்று பழனிசாமி விமர்சித்திருப்பது அவரது அறியாமையை காட்டுகிறது.
பண்ருட்டி ராமச்சந்திரனை பழனிசாமி விமர்சித்திருப்பது அவரது ஆணவத்தின் வெளிபாடு. முன்னாள் முதல்-அமைச்சர் என்ற பதவிக்கு உண்டான பண்பு ஈபிஎஸ்க்கு இல்லை. சுய நலத்தால் பதவி ஆசையால் அதிமுகவை எடப்பாடி பழனிசாமி அழிக்க நினைக்கிறார் . பழனிசாமியால் அதிமுக அழிவுப்பாதைக்கு சென்று கொண்டிருக்கிறது. அதிமுகவை தொண்டர்கள் இயக்கமாக மாற்றுவதற்குத்தான் டிடிவி தினகரனும், ஓ.பன்னீர்செல்வம் சந்தித்தனர். எங்களின் ஆதரவோடு தான் டிடிவி தினகரனை ஓ.பன்னீர்செல்வம் சந்தித்தார். பண்ருட்டி ராமச்சந்திரன், ஜே.சி.டி. பிரபாகர், மனோஜ் பாண்டியன், தாமும் கூட்டாக முடிவெடுத்துதான் டிடிவியை சந்தித்தார் ஓபிஎஸ்.
கூட்டமாக சென்று சந்திக்க வேண்டாம் என்றுதான் ஓபிஎஸ்சை தனியாக சென்று சந்திக்கச் சொன்னோம். ஜெயக்குமார் ஒரு விளையாட்டுப் பிள்ளை; அவரைப் பற்றி கருத்து கூற நான் விரும்பவில்லை. தேவைப்பட்டால் எடப்பாடி பழனிசாமியை தவிர்த்து விட்டு அதிமுக ஒன்று சேரும். மாயமான் இல்லையென்றால் ஈ.பி.எஸ் முதல்-அமைச்சராக ஆகியிருக்க முடியாது. சண்டிக்குதிரை எதற்கும் உதவாது" என்று கூறினார்.