தனியார் ஓட்டலில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்; எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று நடக்கிறது
|கட்சி அலுவலகம் ‘சீல்’ வைக்கப்பட்டதால் சென்னை அடையாறு தனியார் ஓட்டலில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று மாலை நடக்கிறது.
எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்
பா.ஜ.க. கூட்டணி சார்பில் போட்டியிடும் ஜனாதிபதி வேட்பாளர் திரவுபதி முர்மு ஏற்கனவே கடந்த 2-ந் தேதி சென்னை வந்து அ.தி.மு.க. உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்கள் மற்றும் எம்.எல்.ஏ., எம்.பி.க்களை சந்தித்து வாக்கு சேகரித்து சென்றது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் நாளை (திங்கட்கிழமை) நடைபெற உள்ள ஜனாதிபதி தேர்தலில் திரவுபதி முர்முவுக்கு வாக்களிப்பது தொடர்பாக ஆலோசனை மேற்கொள்வதற்கான அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் சென்னை அடையாறில் உள்ள தனியார் நட்சத்திர ஓட்டல் ஒன்றில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை 4 மணியளவில் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற உள்ளது.
பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள்
ஏற்கனவே பல்வேறு ஜனாதிபதி தேர்தல்களை சந்தித்த எம்.எல்.ஏ.க்கள் பலர் இருந்தாலும் புதிதாக தேர்வு செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் எவ்வாறு வாக்களிக்க வேண்டும் என்பது குறித்து இந்த கூட்டத்தில் விளக்கம் அளிக்கப்படும். அதாவது ஒவ்வொரு எம்.எல்.ஏ.வும் தங்களது வாக்குரிமையை எவ்வாறு முறையாக செலுத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்படும்.
இந்த கூட்டத்தில், தமிழக சட்டசபை பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன், ஜனாதிபதி தேர்தலுக்கான பா.ஜ.க. முகவர் வானதி சீனிவாசன், பா.ஜ.க. ஒருங்கிணைப்பாளர் கரு.நாகராஜன் ஆகியோர் கலந்து கொள்கின்றனர். இதில், வானதி சீனிவாசன் ஜனாதிபதி தேர்தலில் வாக்களிப்பது எப்படி? என்பது குறித்து விளக்குகிறார்.
முறையாக அழைப்பு
அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் நடைபெறுவதாக இருந்தது. ஆனால் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் - ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் மோதல் காரணமாக அ.தி.மு.க. தலைமை அலுவலகம் 'சீல்' வைக்கப்பட்டதால் அங்கு இந்த கூட்டத்தை நடத்த முடியாத நிலை ஏற்பட்டது.
எனவே சென்னை பசுமைவழிச்சாலையில் உள்ள எடப்பாடி பழனிசாமியின் இல்லத்தில் வைத்து இந்த கூட்டத்தை நடத்த திட்டமிடப்பட்டது. ஆனால், அதற்கும் ஓ.பன்னீர்செல்வம் தரப்பில், அரசு வழங்கியுள்ள வீட்டில் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடத்தக்கூடாது என்று புகார் தெரிவித்ததன் காரணமாக இந்த எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தை அடையாறில் உள்ள தனியார் நட்சத்திர ஓட்டலில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களுக்கு முறையாக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. சேலத்தில் இருக்கும் எடப்பாடி பழனிசாமி இன்று சென்னை வந்து எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் கலந்து கொள்ள இருக்கிறார். கூடுதலாக இந்த கூட்டத்தில், சட்டசபை எதிர்க்கட்சி துணைத்தலைவர் பதவி குறித்தும் ஆலோசிக்கப்படலாம் என்று தெரிகிறது.