அரியலூர்
திறந்த வெளியில் எரியூட்டுவதால் சுற்றுச்சூழல் பாதிப்பு: அரியலூர் நகரில் மின் மயானம் பயன்பாட்டிற்கு வருமா?
|திறந்த வெளியில் எரியூட்டுவதால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுகிறது. எனவே அரியலூர் நகரில் மின் மயானம் பயன்பாட்டிற்கு வருமா? என பல்வேறு தரப்பினர் எதிர்பார்த்து உள்ளனர்.
மரணம் என்பது உலகில் பிறந்த எல்லா உயிரினங்களுக்கும் நிகழும் ஒரு நிகழ்வாக கருதப்படுகிறது. ஆனால் இது எப்போது நிகழும் என்பது தான் யாருக்கும் தெரிவதில்லை. ''தன்னை வெல்ல யாரும் இல்லை என்ற அகந்தையில் வாழ்ந்தவரும் வெறும் ஆறு அடி குழிக்குள் அடக்கும் தருணம் அது தான் மரணம்'' என்று அறிஞர்கள் கூறுகிறார்கள்.
''ஆடி அடங்கும் வாழ்க்கையடா
ஆறடி நிலமே சொந்தமடா
ஆடி அடங்கும் வாழ்க்கையடா
முதலில் நமக்கெல்லாம் தொட்டிலடா
கண் மூடினால் காலில்லா கட்டிலடா''
என்ற கவிஞர் சுரதா பாடல் வரிகள் மரணத்தை எளிதில் படம் பிடித்து காட்டுகிறது.
அரியலூர் நகராட்சி
அரியலூர் நகராட்சியில் 18 வார்டுகள் உள்ளன. இங்கு 35 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். பல ஆண்டுகளுக்கு முன்பு ஊருக்கு ஒதுக்குப்புறமாக இடுகாடுகள் மற்றும் சுடுகாடுகள் அமைந்திருந்தன. ஆனால் தற்போது மக்கள் தொகை பெருக்கத்தின் காரணமாகவும், நகரத்தின் வளர்ச்சி காரணமாகவும் பொதுமக்கள் வாழும் இடங்களுக்கு அருகே தற்போது மயானங்கள் உள்ளன.
நகர் பகுதியில் இறப்பவர்களின் உடல்கள் கல்லங்குறிச்சி சாலையில் உள்ள சுடுகாட்டில் இறுதிச்சடங்குகள் செய்யப்படுகின்றன. மேலும் அரியலூர் நகர் பகுதியில் மட்டும் 8 சுடுகாடுகள் பல்வேறு இடங்களில் உள்ளன.
சுற்றுச்சூழல் மாசு
இந்த சுடுகாடுகளில் விறகுகள், தேங்காய் மட்டை கொண்டு உடல்களை எரியூட்டுவதால் சுற்றுச்சூழல் மாசு ஏற்படுகிறது. எனவே சுற்றுச்சூழலை காக்கவும், பொதுமக்கள் இறுதி சடங்குகளை எளிதாக செய்யவும் பெரம்பலூர் சாலையில் ரெயில்வே நிலையம் அருகே உள்ள சுடுகாட்டில் நகராட்சி சார்பில் ரூ.60 லட்சம் மதிப்பில் நவீன மின் மயான தகனமேடை கட்டப்பட்டது. கொரோனா காலத்தில் செயல்பட்ட இந்த தகனமேடையை பொதுமக்கள் பயன்படுத்த முன்வராததால் யாருக்கும் பயனின்றி கிடக்கிறது.
எனவே மாவட்ட நிர்வாகமும், நகராட்சி நிர்வாகமும் மக்களின் வரிப்பணத்தில் கட்டப்பட்ட இந்த மின் மயானத்தை முழுமையான பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து பொதுமக்கள் தெரிவித்த கருத்துகள் விவரம் வருமாறு:-
புகையிலிருந்து காக்க முடியும்
அழகு:- அரியலூர் பகுதியில் மக்கள் தொகை குறைவாக இருந்த காலத்தில் அந்தந்த பகுதிகளுக்கு அருகாமையில் சுடுகாடுகளை அப்பகுதி மக்கள் ஏற்படுத்திக் கொண்டனர். ஆனால் தற்போது மக்கள் தொகை பெருகிவிட்டது. மேலும் சுகாதாரத்தை எதிர்நோக்கும் காலமாக உள்ளது. அதனால் மக்களுக்கு எவ்விதமான பாதிப்புகளும் வரக்கூடாது என அரியலூர் நகராட்சி நிர்வாகம் மின்மயமாக்கப்பட்ட மயானத்தை பெரம்பலூர் சாலையில் ரெயில்வே நிலையம் அருகே அமைத்தது. ஆனாலும் மக்கள் அதை முழுமையான பயன்பாட்டிற்கு கொண்டு வர மறுக்கிறார்கள். சில இடங்களில் மக்கள் வசிக்கும் வீடுகளுக்கு அருகிலேயே சுடுகாடு அமைந்துள்ளது. இதனால் மக்கள் பெரிதும் பாதிப்புக்கு உள்ளாகின்றனர். தமது முறைப்படி எரிக்கும் பழக்கத்தையும், புதைக்கும் பழக்கத்தையும் கொண்டுள்ளனர். அதன் காரணமாகவே நவீன தகனமேடையை பயன்படுத்த மக்கள் தயக்கம் காட்டி வருகிறார்கள். எனவே மாவட்ட நிர்வாகம் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி நவீன மின் தகன மேடையை பயன்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பயன்பாட்டுக்கு வர வேண்டும்
அசோக்:- அரியலூர்- பெரம்பலூர் சாலையில் ரெயில் நிலையம் அருகே அரியலூர் நகராட்சி சார்பில் பல லட்சம் ரூபாய் செலவில் மின் மயானம் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் இதனை பயன்படுத்த பொதுமக்கள் தயக்கம் காட்டி வருகிறார்கள். ஏனென்றால் நம் முன்னோர்கள் மரக்கட்டை வைத்து தான் உடல்களை எரிப்பதை வழக்கமாக கொண்டிருந்தனர். அதனால் வழக்கத்திற்கு மாறாக செய்வதை சிலர் விரும்பவில்லை. அரியலூர் நகர மக்கள் கல்லங்குறிச்சி சாலையில் அமைந்துள்ள இடுகாடு மற்றும் சுடுகாட்டிலேயே அதிகளவு இறுதிச்சடங்குகளை நடத்தி வருகிறார்கள். பொதுமக்கள் நலன் கருதியே பெரம்பலூர் சாலையில் மின் மயானம் அமைக்கப்பட்டது. ஆனால் அதில் தற்போது மாதத்திற்கு 2 அல்லது 3 இறுதிச்சடங்குகளே நடக்கின்றன. அதுவும் ஏழைகள் மற்றும் அனாதை பிணங்களே தகனம் செய்யப்படுகின்றன. ஆனால் கொரோனா காலக்கட்டத்தில் தொடர்ந்து உபயோகத்தில் இருந்தது. ஆனால் தற்போது இதனை எதற்காக மக்கள் புறக்கணிக்கிறார்கள் என்பது புரியவில்லை. ஒருவேளை பாலத்திற்கு மேல் புறமாக ஏறி பின்புறமாக வந்து உடலை தகனம் செய்வது சிரமமாக உள்ளதா? அல்லது பாலத்திற்கு அடி புறமாக சென்று வருவது சிரமமாக இருக்கிறதா? என்று தெரியவில்லை. பொதுமக்கள் அனைவரும் மின்மயானத்தை பயன்படுத்தினால் சுற்றுச்சூழலும் காக்கப்படும்.
உடல்நலம் பாதிக்கும்
சுற்றுச்சூழல் ஆராய்ச்சியாளர் முனைவர் அனிதா:-
இறந்தவர்களை ஒரு காலத்தில் தாழியில் வைத்தோ, பூமியில் புதைத்து வந்தனர். ஏன் நம் முன்னோர்கள் உடல்களை புதைத்தனர் என்றால் மண்ணில் உருவான அனைத்தும் மண்ணோடு மண்ணாக வேண்டும் என்பதை உணர்த்தத்தான். இதனால் ஒருவருக்கும் தீங்கு ஏற்படுவதில்லை. ஒரு வகையில் நன்மையே. காலப்போக்கில் நோய்வாய்ப்பட்டவர்களிடமிருந்து நோய் தொற்று ஏற்படும் அபாயத்தை தடுக்கவே உடல்களை எரித்தனர்.
அரியலூர் புறவழிச்சாலையில் திறந்த வெளியில் சிதை மூட்டுவதால் அவ்வழியே செல்லும் பெண்கள், குழந்தைகள், வயதானவர்கள் என அனைவரும் இதை சுவாசிக்க வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்படுகின்றனர். இதனால் அவர்களுக்கு நுரையீரல் சம்பந்தப்பட்ட நோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. மேலும் நுரையீரல் பாதிக்கப்பட்டவர்களை இதனை தொடர்ந்து சுவாசித்தால் அவர்களுடைய உடல்நலம் பாதிக்கும்.
சுற்றுச்சுவர் கட்ட வேண்டும்
அரியலூரில் அமைக்கப்பட்டுள்ள மின் மயானத்தின் பணிகளை அரியலூர் மாவட்ட சிமெண்டு சிட்டி அரிமா சங்கத்தினர் மேற்கொண்டு வருகின்றனர். மயான பணிகளுக்காக 4 பேருக்கு ரூ.45 ஆயிரத்திலிருந்து ரூ.60 ஆயிரம் வரை சம்பளம் கொடுத்து வருகிறார்கள். ஒரு உடலை எரிப்பதற்கு 2 வணிக சிலிண்டர்கள் தேவைப்படும். கொரோனா காலக்கட்டத்தில் ஏராளமான இறுதிச்சடங்குகள் நடைபெற்றன. ஆனால் தற்போது மாதத்திற்கு 2 அல்லது 3 உடல்கள் மட்டுமே தகனம் செய்யப்படுகிறது. இதிலிருந்து பெறப்படும் தொகையை வைத்துக் கொண்டு எவ்வாறு ஊழியர்களுக்கு சம்பளம் அளிப்பது என்பது தெரியவில்லை. சேவை மனப்பான்மையுடன் தான் இதனை செய்து வருகிறோம். நகரில் குடியிருப்பு பகுதியில் செயல்படும் மயானங்களில் திறந்த வெளியில் உடல்களை எரிப்பதால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதுடன், பொதுமக்கள் மற்றும் சிறுவர்களுக்கு தொற்று நோய் ஏற்படும் அவலம் உள்ளது. எனவே பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி நவீன மின் தகனமேடையை பயன்படுத்த வேண்டும். மேலும் மயானத்தை சுற்றி சுற்றுச்சுவர் கட்ட மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.