விழுப்புரம்
சுற்றுச்சூழல், சுகாதாரத்தை பாதுகாப்பதிலும் மாணவர்கள் கவனம் செலுத்த வேண்டும் கலெக்டர் மோகன் அறிவுரை
|சுற்றுச்சூழல், சுகாதாரத்தை பாதுகாப்பதிலும் மாணவர்கள் கவனம் செலுத்த வேண்டும் என்று மாணவ, மாணவிகளுக்கு கலெக்டர் மோகன் அறிவுரை வழங்கி உள்ளார்.
விழுப்புரம் அரசு மாதிரி மகளிர் மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட கலெக்டர் மோகன் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது பள்ளி வளாகம், வகுப்பறைகள், கழிவறைகள் ஆகியவற்றை பார்வையிட்டு நாள்தோறும் கழிவறை வளாகங்களை சுத்தமாக வைப்பதுடன் நாள் ஒன்றுக்கு 3 வேளையும் சுத்தம் செய்து கழிவறை வளாகத்தை வைக்க வேண்டும், அதற்காக பள்ளி நிர்வாகக்குழுவுடன் நகராட்சி ஒருங்கிணைந்து நாள்தோறும் சுழற்சி முறையில் 10 பணியாளர்களை இப்பணிக்கு ஈடுபடுத்த வேண்டும் என்று அறிவுறுத்தினார். மேலும் மாணவிகளிடம் மாவட்ட கலெக்டர் மோகன், அறிவுரை வழங்கி பேசியதாவது:-
நாம் கற்கும் கல்வியை திட்டமிட்டு செயல்படுத்துவோமானால் எதிர்காலம் சிறந்து விளங்கிடும். அதனால் கல்வி கற்கும் பருவத்தில் திட்டமிட்டு சிறந்த முறையில் கல்வி கற்று குறிப்பிட்ட இலக்கை பெற வேண்டும். ஒவ்வொருவரும் தன்னம்பிக்கை, மனதைரியத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும். ஏதோ ஒரு சூழ்நிலையில் தோல்வி என்ற நிலை வரும்போது துவண்டு விடக்கூடாது. தோல்வி என்பதும், வெற்றி என்பதும் நிலையான ஒன்றல்ல, மாற்றங்களுக்கு உட்பட்டதுதான். அதை உணர்ந்து செயல்பட்டாலே எல்லோரும் தைரியசாலிகள்தான்.
சுற்றுச்சூழல் பாதுகாப்பு
எப்போதுமே வெற்றிக்கு அருகில் நீங்கள் இருக்கிறீர்கள். தைரியமாக, தன்னம்பிக்கையாக முயற்சியுங்கள், எதையும் சாதிக்க முடியும். அதேபோல் கல்விக்கு எந்தளவிற்கு கவனம் செலுத்துகிறீர்களோ அந்தளவிற்கு சுற்றுச்சூழல், சுகாதாரத்தை பாதுகாப்பதும் மாணவ- மாணவிகளுக்கு அதிகளவு பொறுப்பு உண்டு, அதை உணர்ந்து கவனம் செலுத்திட வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
தொடர்ந்து, மழலையர்கள் வகுப்பறைக்கு சென்று மழலைச்செல்வங்களுடன் மாவட்ட கலெக்டர் மோகன், கலந்துரையாடி நன்றாக படிக்க வேண்டும் என்று அறிவுரை வழங்கினார்.இந்த ஆய்வின்போது விழுப்புரம் நகரமன்ற தலைவர் தமிழ்செல்வி, துணைத்தலைவர் சித்திக்அலி, தாசில்தார் ஆனந்தகுமார், நகராட்சி ஆணையர் சுரேந்திரஷா, மாவட்ட கல்வி அலுவலர் (பொறுப்பு) காளிதாஸ், முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் பெருமாள், பள்ளி தலைமை ஆசிரியர் சசிகலா மற்றும் ஆசிரியர்கள் பலர் உடனிருந்தனர்.