கடலூர்
பின்னி பிணைந்து நடனமாடிய பாம்புகள்
|புவனகிரி அருகே பின்னி பிணைந்து நடனமாடிய பாம்புகளை வாகன ஓட்டிகள் வேடிக்கை பார்த்தனர்.
புவனகிரி
கடலூர் மாவட்டம் புவனகிரி-சிதம்பரம் சாலையில் வயலூர் மெயின் ரோடு அருகில் நேற்று காலை 10 மணி அளவில் சாலை ஓரத்தில் உள்ள சிறிய வாய்க்கால் பகுதியில் சுமார் 10 அடி நீளம் கொண்ட சாரைப்பாம்பு வந்தது. அடுத்த சில நிமிடங்களில் அதே அளவில் இன்னொரு சாரைப்பாம்பும் வந்தது. பின்னர் அவை எதிர் எதிரே ஒன்றை ஒன்று பார்த்தபடி நின்றன. அடுத்த சில நிமிடங்களில் 2 பாம்புகளும் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்து நடனம் ஆடிக்கொண்டிருந்தன. இதை அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகள் பார்த்ததும் வாகனங்களை சாலையிலேயே நிறுத்திவிட்டு வேடிக்கை பார்த்தனர். சிலர் தங்களிடம் இருந்த செல்போனில் படம் மற்றும் வீடியோ எடுத்து உறவினர்கள், நண்பர்களுக்கும் பகிர்ந்தனர். நேரம் செல்ல செல்ல மக்கள் கூட்டம் கூடியது. ஆனாலும் பாம்புகள் அசராமல் தொடா்ந்து நடனம் ஆடிக்கொண்டிருந்தன. சுமார் 1 மணி நேரத்துக்கு பிறகு 2 பாம்புகளும் ஒன்றை ஒன்று பிரிந்து அங்கிருந்து மெதுவாக நகர்ந்து சென்றன. சாரைப்பாம்புகள் ஒன்றோடொன்று பின்னி பிணைந்து நடனம் ஆடிய சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டதோடு, வாகன ஓட்டிகள் சாலையிலேயே வாகனங்களை நிறுத்தி வைத்துக்கொண்டு வேடிக்கை பார்த்ததால் கடலூர்-சிதம்பரம் சாலையில் போக்குவரத்து பாதிப்பும் ஏற்பட்டது.