< Back
மாநில செய்திகள்
வடமாநிலத் தொழிலாளர்களைக் கட்டுப்படுத்த உள்நுழைவு அனுமதிச்சீட்டு முறையை நடைமுறைப்படுத்த வேண்டும் - சீமான்
மாநில செய்திகள்

வடமாநிலத் தொழிலாளர்களைக் கட்டுப்படுத்த உள்நுழைவு அனுமதிச்சீட்டு முறையை நடைமுறைப்படுத்த வேண்டும் - சீமான்

தினத்தந்தி
|
27 Oct 2023 4:01 PM IST

சட்டம்-ஒழுங்கினை சீரழிக்கும் வடமாநிலத் தொழிலாளர்களைக் கட்டுப்படுத்த உள்நுழைவு அனுமதிச்சீட்டு முறையை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று சீமான் கூறியுள்ளார்.

சென்னை,

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்து இருப்பதாவது:-

சென்னை அம்பத்தூரில் வடமாநிலத் தொழிலாளர்களிடையே ஆயுதபூஜை அன்று மதுபோதையில் ஏற்பட்ட மோதலைத் தடுக்கச் சென்ற தமிழ்நாடு காவலர்களை வட மாநிலத்தவர் கட்டையாலும், கற்களாலும் கடுமையாகத் தாக்கும் காணொளி பெரும் அதிர்ச்சியையும், கடும் கோபத்தையும் ஏற்படுத்துகிறது.

கடந்த காலத்தில் உலகின் இரண்டாவது தலைச்சிறந்த காவல்துறை என்ற பெயர்பெற்ற தமிழ்நாட்டு காவல்துறை இன்றைக்கு வட மாநிலத் தொழிலாளர்களால் விரட்டி விரட்டி தாக்கப்படும் அளவிற்கு தரம் குறைந்து போயிருப்பது வெட்கக்கேடானது.

கடந்த 2022ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சியில் இதே போன்று, வடமாநில இளைஞர்கள் காவல் ஆய்வாளர் உட்பட ஏழு தமிழக காவல்துறையினரைக் கடுமையாகத் தாக்கி, மருத்துவமனையில் சிகிச்சை பெறும் அளவிற்கு கட்டுக்கடங்காத வன்முறையில் ஈடுபட்டபோதே அதனை நான் கடுமையாக கண்டித்திருந்தேன். அப்போதே தமிழ்நாடு அரசு உரிய கடுமையான நடவடிக்கைகள் எடுத்திருந்தால் தற்போது அம்பத்தூரில் காவலர் ரகுபதி வட மாநிலத்தொழிலாளர்களால் தாக்கப்பட்டு ஆவடி மருத்துவமனையில் சிகிச்சை பெறும் அளவிற்கு பரிதாபகரமான நிலை ஏற்பட்டிருக்காது. தமிழ்நாட்டில் வட மாநிலத்தவரின் குற்றச்செயல்கள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் அதனைத் தடுத்து நிறுத்தாது, கைகட்டி வேடிக்கை பார்க்கும் தமிழ்நாடு அரசின் அலட்சியப்போக்கு வன்மையான கண்டனத்திற்குரியது.

கடந்த சில ஆண்டுகளாக வேலைவாய்ப்பு தேடி தமிழ்நாட்டிற்கு வரும் வட மாநிலத்தவரின் எண்ணிக்கை பல இலட்சக்கணக்கில் அதிகரித்து வருகிறது. சென்னை, திருச்சி, மதுரை, திருப்பூர் போன்ற பெருநகரங்களில் அதிகரிக்கத் தொடங்கிய வட மாநிலத்தவர் ஆதிக்கம் தற்போது தமிழ்நாட்டின் இரண்டாம் நிலை நகரங்களிலும் கட்டுக்கடங்காமல் அதிகரித்து வருகிறது.

இதன் காரணமாக மண்ணின் மைந்தர்களான தமிழர்களின் வேலைவாய்ப்பு பாதிக்கப்படுவதோடு, பொருளாதாரமும் பெருமளவு பறிபோகிறது. மேலும், அவ்வாறு வேலைக்கு வரும் வட மாநிலத்தவர்கள் அடுத்த சில மாதங்களிலேயே குடும்ப அட்டை, வாக்காளர் அட்டை, இருப்பிட சான்று உள்ளிட்டவை பெற்று நிரந்தரமாக தமிழ்நாட்டில் குடியேறும் நிகழ்வும் அதிகரித்து வருகிறது. இதனால் தமிழர்கள் தங்கள் அதிகாரத்தை இழந்து ஏதிலிகளாக மாறும் நிலமாக தமிழ்நாடு மெல்ல மெல்ல மாறிவருகிறது.

அதுமட்டுமின்றி கொலை, கொள்ளை, போதைப்பொருள் கடத்தல், பாலியல் வன்புணர்வு உள்ளிட்ட கொடுங்குற்றச் செயல்களில் வடமாநிலத்தவர்கள் ஈடுபடுவதும், கும்பல் மனப்பான்மையில் பொதுச்சொத்துக்களைச் சேதப்படுத்தும் நிகழ்வுகளும் அண்மைக்காலமாக அதிகரித்து வருகிறது. இதனால் தமிழ்நாட்டில் பொதுமக்கள் பெரும் அச்சத்துடனேயே வாழும் கொடுஞ்சூழலே நிலவுகிறது.

திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, நாளுக்குநாள் அதிகரித்த அத்தகைய குற்றச்செயல்களைத் தடுக்கத் தவறிய தமிழ்நாடு அரசின் அலட்சியப்போக்கே, தற்போது காவல்துறையினரையே கண்மூடித்தனமாகத் தாக்கும் அளவிற்கு சட்டம்-ஒழுங்கு சீர்குலைய முக்கியக் காரணமாகும்.

ஆகவே, தமிழ்நாடு அரசு இதற்கு மேலாவது விழித்துக்கொண்டு, தமிழ்நாட்டிற்குள் பணிக்கு வரும் வெளி மாநிலத்தவரின் எண்ணிக்கை, பணி புரியும் நிறுவனம், காலம், தங்கும் இடம், அவர்களின் சொந்த முகவரி ஆகியவற்றைப் பதிவு செய்யும் வகையில் உடனடியாக உள்நுழைவு அனுமதிச் சீட்டு (ILP – Inner Line Permit) முறையை நடைமுறைப்படுத்துவதற்கு தனிச் சட்டம் இயற்ற வேண்டுமென்று நாம் தமிழர் கட்சி சார்பாகக் கேட்டுக்கொள்கிறேன்.

மேலும் அம்பத்தூரில் தமிழக காவல்துறையினர் மீது தாக்குதல் நடத்திய வடமாநிலத்தவர்கள் அனைவரையும் கைது செய்து சட்டப்படி கடும் தண்டனை் பெற்றுத் தருவதோடு, அதிகரித்து வரும் வடமாநிலத்தவரின் குற்றச்செயல்களைக் கட்டுக்குள் கொண்டுவந்து தமிழ்நாட்டின் சட்டம்-ஒழுங்கை பாதுகாக்க வேண்டுமெனவும் தமிழ்நாடு அரசினை வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு அதில் தெரிவித்து உள்ளார்.

மேலும் செய்திகள்