பெரம்பலூர்
தபால்காரர் மூலம் வீடு தேடி வந்த மகளிர் உரிமைத்தொகை
|தபால்காரர் மூலம் வீடு தேடி வந்த மகளிர் உரிமைத்தொகையால் குடும்ப தலைவிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தமிழகத்தில் தகுதியான குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கப்படும் கலைஞர் மகளிா் உரிமை திட்டத்தில் ஏற்கனவே பெரம்பலூர் மாவட்டத்தில்விண்ணப்பங்கள் பதிவு செய்யும் முகாமில் மொத்தம் 1 லட்சத்து 63 ஆயிரத்து 150 விண்ணப்பங்கள் பெறப்பட்டது. அதில் 62 ஆயிரத்து 476 விண்ணப்பங்கள் கள ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்திற்கு முதற்கட்டமாக வங்கிகள் மூலம் 7 ஆயிரத்து 823 பேருக்கு பணம் எடுக்கும் ஏ.டி.எம். கார்டுகள் வரப்பெற்றுள்ளது. அதில் 2 ஆயிரம் பேருக்கு ஏ.டி.எம். கார்டுகள் கடந்த 15-ந்தேதி வழங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் கூடுதல் விவரங்கள் தேவைப்படுவோருக்கும். விண்ணப்பங்கள் நிராகரிப்பு தகவல்கள் வழங்குவதற்கும் மற்றும் வங்கிகள் தொடர்பான குறைகளை களைவதற்கும் பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம், வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம், பெரம்பலூர், ஆலத்தூர், வேப்பந்தட்டை, குன்னம் ஆகிய தாசில்தார் அலுவலகங்களில் கலைஞர் மகளிா் உரிமை திட்டங்களுக்கு உதவி மையங்கள் ஏற்படுத்தப்பட்டு பொறுப்பு அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நிராகரிக்கப்பட்ட குடும்ப தலைவிகள் இ-சேவை மையங்கள் மேல்முறையீடு செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் மாவட்டத்தில் வங்கி கணக்கு இல்லாத மற்றும் வங்கி கணக்கு உடன் ஆதார், பான் கார்டுகளின் எண்களை இணைக்க தவறிய சில தகுதியான குடும்ப தலைவிகளுக்கு அரசின் உத்தரவின்படி தபால் நிலையத்தில் கணக்கு தொடங்கப்பட்டது. அந்த குடும்ப தலைவிகளுக்கு இந்த மாதத்திற்கான ரூ.1,000-த்தை தபால்காரர் குடும்ப தலைவிகளின் வீடு தேடி சென்று வழங்கி வருகின்றனர். அந்த தொகையை மகிழ்ச்சியுடன் பெற்று கொண்ட குடும்ப தலைவிகள் இதற்கான நடவடிக்கை எடுத்த தமிழக அரசுக்கும், மாவட்ட நிர்வாகத்துக்கும் நன்றியை தெரிவித்து கொண்டனர்.