திருச்சி
வந்தே பாரத் ரெயிலுக்கு திருச்சியில் உற்சாக வரவேற்பு
|வந்தே பாரத் ரெயிலுக்கு திருச்சியில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
உற்சாக வரவேற்பு
பிரதமர் நரேந்திர மோடி 9 வந்தே பாரத் ரெயில்களை நேற்று தொடங்கி வைத்தார். இதையொட்டி நெல்லை-சென்னை இடையேயான வந்தே பாரத் ரெயிலை வரவேற்று, வழியனுப்பும் நிகழ்ச்சி திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையத்தில் நடைபெற்றது. இதில் அந்த ரெயில் நெல்லையில் இருந்து மதியம் 12.30 மணிக்குப் புறப்பட்டு திருச்சிக்கு மாலை 5.20 மணிக்கு வந்தடைந்தது. அந்த ரெயிலுக்கு திருச்சி ரெயில்வே அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். மாணவ-மாணவிகள் இசைக்கருவிகள் முழங்க வந்தே பாரத் ரெயிலை வரவேற்றனர்.
இந்த ரெயிலில் மத்திய இணை மந்திரி எல்.முருகன் நெல்லையில் இருந்து திருச்சி வரை பயணம் செய்தார். பின்னர் திருச்சியில் இருந்து புறப்பட்ட வந்தே பாரத் ரெயிலை கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். அந்த ரெயில் சென்னைக்கு புறப்பட்டு சென்றது. மேலும் இந்த ரெயிலில் பள்ளி மாணவ-மாணவிகள் அரியலூர் வரை பயணம் செய்தனர். இந்த நிகழ்ச்சியில் திருச்சி ரெயில்வே கோட்ட மேலாளர் அன்பழகன், முதுநிலை கோட்ட வணிக மேலாளர் செந்தில்குமார் மற்றும் ரெயில்வே ஊழியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தள்ளு முள்ளு
இதைத்தொடர்ந்து அரியலூர் ரெயில் நிலையத்திற்கு நேற்று மாலை 6.20 மணியளவில் வந்தே பாரத் ரெயில் வந்தது. அப்போது பொதுமக்கள், ரெயில் பயணிகள் சங்கத்தினர், பள்ளி மாணவ- மாணவிகள் ரெயிலுக்கு மலர்தூவி வரவேற்றனர். ரெயிலை இயக்கிய டிரைவருக்கு பூங்கொத்துகள் கொடுக்கப்பட்டது. வந்தே பாரத் ரெயிலை ஏராளமானோர் புகைப்படம் மற்றும் ரெயிலின் முன்னே நின்று செல்பி எடுத்ததை காண முடிந்தது. இதையடுத்து தொல்.திருமாவளவன் எம்.பி., சின்னப்பா எம்.எல்.ஏ. ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வந்தே பாரத் ரெயிலுக்கு பச்சைக்கொடி காட்டி வழி அனுப்பி வைத்தனர்.
இதற்கிடையே பா.ஜனதாவினர் 'பாரத் மாதாவுக்கு ஜே' என்று கோஷம் எழுப்பினர். அப்போது அங்கு இருந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் 'ஜெய் பீம்' என்று கோஷம் எழுப்பினர். இதனால் அவர்களுக்கு இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. இதையடுத்து, அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களை சமரசம் செய்து அங்கிருந்து அனுப்பி வைத்தனர். இதனால் ரெயில் நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
ஆட்டம்-பாட்டத்துடன் பயணம்
வந்தே பாரத் ரெயிலில் பயணம் செய்த பயணிகள் கூறிய கருத்துகள் வருமாறு:-
மதுரையை சேர்ந்த சுந்தரமகாலிங்கம்:- நான் மதுரையில் இருந்து எனது குடும்பத்துடன் வந்தே பாரத் ரெயிலில் பயணம் செய்து திருச்சிக்கு வந்துள்ளேன். இந்த ரெயிலில் பயணம் செய்தது மகிழ்ச்சியாக உள்ளது. அதிலும் 2 மணி நேரத்தில் திருச்சிக்கு வந்தது வியப்பளிக்கிறது. இந்த ரெயில் அனைத்து தரப்பு மக்களின் தேவைகளை பூர்த்தி செய்யக்கூடியது. இந்த ரெயிலில் அனைவரும் ஆட்டம், பாட்டத்துடன் பயணம் மேற்கொண்டனர். குறிப்பாக யாருக்கும் ரெயில் பயணத்திற்கான டிக்கெட் கட்டணம் வசூலிக்கவில்லை.
சுவையான உணவு
அரியலூரை சேர்ந்த பள்ளி மாணவர் கார்னேஷ்:- நான் திருச்சியில் இருந்து அரியலூருக்கு செல்கிறேன். இந்த ரெயிலை முதல் முறையாக இப்போது தான் பார்க்கிறேன். இந்த ரெயில் வேகமாக செல்கிறது. மேலும் எனது நண்பர்களுடன் இந்த ரெயிலில் செல்வது மகிழ்ச்சியாக உள்ளது.
நெல்லையை சேர்ந்த ஹரீஷ்:- நான் நெல்லையில் இருந்து வருகிறேன். இந்த ரெயிலில் காலை உணவாக சப்பாத்தி, இட்லி மற்றும் மதியம் மினி டிபன் போன்றவை வழங்கப்படுகிறது. இந்த உணவுகள் சுவையாகவும், தரமானதாகவும் உள்ளது. இந்த ரெயிலில் சென்னைக்கு விரைவாக செல்வது மகிழ்ச்சி அளிக்கிறது.