அரியலூர்
மாநில அளவில் பதக்கம் வென்ற மாணவர்களுக்கு உற்சாக வரவேற்பு
|மாநில அளவில் பதக்கம் வென்ற மாணவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
அரியலூர் நகரில் ஆர்.சி.தூய மேரி உயர்நிலைப்பள்ளியில் படிக்கும் மாணவர்கள் அண்மையில் விருதுநகரில் நடைபெற்ற மாநில அளவிலான குத்துச்சண்டை போட்டியில் பங்கேற்றார்கள். இதில் ஜுனியர் பிரிவில் 50-55 கிலோ எடைபிரிவில் 8-ம் வகுப்பு மாணவன் அஜய் வெள்ளி பதக்கமும், ராகவன் 36-38 கிலோ எடை பிரிவில் வெண்கல பதக்கமும், 9-ம் வகுப்பு மாணவன் சசிக்குமார் 42-45 கிலோ எடைபிரிவில் வெள்ளி பதக்கமும் வென்றனர். மாணவர்கள் பள்ளிக்கு வருகை புரிந்த போது சக மாணவர்கள் கைத்தட்டி உற்சாகப்படுத்தி வரவேற்பு அளித்தனர். பின்னர் மாணவர்களை பாராட்டி பள்ளி தாளாளர் டோமினிக் சேவியோ பேசுகையில், இன்றைய காலகட்டங்களில் மாணவர்கள் செல்போன் உள்ளிட்ட தேவையில்லாத விஷயங்களில் நேரத்தை செலவிடுகின்றனர். வெற்றி பெற்ற மாணவர்களைப்போல் ஏதாவது ஒரு விளையாட்டில் ஈடுபட்டால் உடலும் நலமாகும், வாழ்வும் நலமாகும் என்றார். இதில் பள்ளி தலைமை ஆசிரியர் சக்கரவர்த்தி, பயிற்சியாளர் ராஜேஷ் மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர். மாநில அளவில் வெற்றி பெற்ற மாணவர்கள் உத்தர பிரதேசத்தில் நடைபெற உள்ள தேசிய அளவிலான போட்டிக்கு தேர்வாகி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.