< Back
மாநில செய்திகள்
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு
பெரம்பலூர்
மாநில செய்திகள்

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு

தினத்தந்தி
|
29 Nov 2022 1:34 AM IST

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

பெரம்பலூர்-அரியலூர் மாவட்டங்களில் நடந்த விழா மற்றும் நிகழ்ச்சியில் பங்கேற்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திருச்சியில் இருந்து கார் மூலம் நேற்று மதியம் பெரம்பலூர் வந்தார். அவருக்கு மாவட்ட எல்லையான பாடாலூரில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது பாடாலூர் புனிதமாதா பள்ளி மற்றும் சிறுவாச்சூர் ஆல்மைட்டி பள்ளி மாணவ-மாணவிகள் அளித்த வரவேற்பை ஏற்றுக்கொண்ட முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், வேனில் இருந்து இறங்கி வந்து மாணவ-மாணவிகளுடன் கைகுலுக்கி நன்றாக படிக்கும்படி அவர்களை வாழ்த்தினார்.

இதைத்தொடர்ந்து எறையூரில் நடந்த தொழில் பூங்கா அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொண்ட முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மதியம் பெரம்பலூர் பாலக்கரையில் உள்ள முன்னாள் மத்திய மந்திரி ஆ.ராசா எம்.பி.யின் அலுவலகத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தங்கி, மதிய உணவு சாப்பிட்டார்.

நிர்வாகிகளுடன் சந்திப்பு

உணவு இடைவேளையின்போது விவசாயிகள் சங்க தலைவர்கள் ராஜாசிதம்பரம், திருச்சி அய்யாக்கண்ணு தலைமையில் முதல்-அமைச்சரை சந்தித்து விவசாயிகளின் பிரச்சினைகள் குறித்து மனுக்களை அளித்தனர். நரிக்குறவர்கள் சங்கத்தின் மாநில தலைவர் காரை.சுப்ரமணியன் தலைமையில் நரிக்குறவர்கள் முதல்-அமைச்சரை சந்தித்து, நாரணமங்கலத்தில் உள்ள எம்.ஆர்.எப். டயர் தொழிற்சாலையில் இருந்து வெளியேறும் மாசுக்களால் விவசாய நிலங்கள், சுற்றுப்புறச்சூழல் பாதிக்கப்படுவதாக கூறி மனுக்கள் அளித்தனர்.

பின்னர் சிறிது நேரம் ஓய்வு எடுத்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மாலையில் பெரம்பலூர் மாவட்ட தி.மு.க. நிர்வாகிகளை சந்தித்தார்.

பெண்கள், குழந்தைகளுடன்...

அதன்பிறகு அரியலூர் மாவட்டத்திற்கு செல்வதற்காக புறப்பட்ட முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், பாலக்கரை பகுதியில் மாவட்ட தி.மு.க. அலுவலகம் முன்பு சாலையின் இருபுறமும் திரண்டிருந்த பொதுமக்களை பார்த்தவுடன் சிறிது தூரம் நடந்து சென்று பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றார். அப்போது பெண்கள், குழந்தைகள் மற்றும் கட்சியினர் அவருடன் கைகுலுக்கி உற்சாகமாக பேசினார்கள். கட்சி தொண்டர்கள் பரிசாக அளித்த புத்தகங்களை அவர் ஆர்வமாக பெற்றுக்கொண்டார்.

முதல்-அமைச்சர் வருகையையொட்டி பெரம்பலூர் பாலக்கரை பகுதியில் இருந்து துறைமங்கலம் மூன்று ரோடு, நான்கு ரோடு சந்திப்பு வரை கொடிகள், தோரணங்களால் களை கட்டியிருந்தன. முதல்-அமைச்சரை பார்க்க வந்த பொதுமக்களை கட்டுப்படுத்துவதற்காக தடுப்பு கட்டைகள் வைக்கப்பட்டிருந்தன.

இந்த நிகழ்ச்சியின்போது தி.மு.க. துணை பொதுச்செயலாளர் ஆ.ராசா எம்.பி., அமைச்சர்கள் கே.என்.நேரு, தங்கம் தென்னரசு, சிவசங்கர், அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சி.வெ.கணேசன், பெரம்பலூர் மாவட்ட செயலாளர் குன்னம் ராஜேந்திரன், எல்.எல்.ஏ.க்கள் பிரபாகரன் (பெரம்பலூர்), வசந்தம்கார்த்திகேயன் (ரிஷிவந்தியம்) மற்றும் பெரம்பலூர் மாவட்ட தி.மு.க. செயலாளர் குன்னம் ராஜேந்திரன் மற்றும் கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.

மனுக்கள் பெற்றார்

இதைத்தொடர்ந்து அரியலூர் மாவட்டத்திற்கு வேனில் சென்ற முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு, துறைமங்கலம் நான்குரோடு சந்திப்பு, கவுல்பாளையம், பேரளி கிராமங்களில் சாலையின் இருபுறமும் கட்சி தொண்டர்கள், பொதுமக்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர். குன்னம் பகுதியில் சாலையோரம் திரண்டிருந்த பொதுமக்களை பார்த்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வேனை நிறுத்த செய்து பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார்.

மேலமாத்தூர் பகுதியில் ஆலத்தூர் ஒன்றியக்குழு தலைவர் என்.கிருஷ்ணமூர்த்தி தலைமையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. வரவேற்பு நிகழ்ச்சியில் வேப்பூர் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் பிரபா செல்லப்பிள்ளை, லெப்பைக்குடிக்காடு பேரூராட்சி தலைவர் ஜாகிர் உசேன், துணைத் தலைவர் ரசூல் அஹமது, எறையூர் ஊராட்சி மன்ற தலைவர் ஜெயந்தி ராம்குமார், வி.களத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் பிரபு ஆகியோரும் கலந்து கொண்டனர்.

அரியலூர் மாவட்டத்தில்...

அரியலூர் மாவட்டத்தில் ஜெயங்கொண்டத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நகர தி.மு.க. செயலாளரும், நகராட்சி துணை தலைவருமான வெ.கொ.கருணாநிதி தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. இதில் நகராட்சி தலைவர் சுமதி சிவக்குமார், நகராட்சி ஆணையர் மூர்த்தி, வட்டார வளர்ச்சி அலுவலர் பிரபாகரன், கழுவந்தோண்டி ஊராட்சி மன்ற தலைவர் மகாலிங்கம், ஆண்டிமடம் தெற்கு ஒன்றிய ெசயலாளர் கலியபெருமாள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். உடையார்பாளையத்தில் நகர தி.மு.க. செயலாளர் கோபால கிருஷ்ணன் தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. மேலும் வழிநெடுகிலும் சாலையோரங்களில் கட்சியினர், பொதுமக்கள் திரண்டு வரவேற்பு அளித்தனர்.

மேலும் செய்திகள்