சென்னை
ராதை, கிருஷ்ணர் வேடம் அணிந்து உற்சாகம்: சென்னையில் கிருஷ்ண ஜெயந்தி கோலாகலம்
|சென்னையில் கிருஷ்ண ஜெயந்தி உற்சாகமாக கொண்டாடப்பட்டது. ராதை, கிருஷ்ணர் வேடம் அணிந்த குழந்தைகள் மாட்டு வண்டியில் உற்சாகமாக வலம் வந்தனர்.
கிருஷ்ண ஜெயந்தி தமிழகம் முழுவதும் நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. சென்னை மயிலாப்பூரில் உள்ள நந்தலாலா கிருஷ்ணன் கோவிலில் கிருஷ்ணருக்கு காலை முதலே சிறப்பு அபிஷேகங்களும், பூஜைகளும் நடந்தது.
ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர். கோவில் வளாகத்தில் கிருஷ்ணர் பிறந்தநாளை நினைவு கூரும் வகையில் கிருஷ்ணர் குழந்தை பருவ நிகழ்வுகள் காட்சிப்படுத்தப்பட்டு இருந்தது.
சென்னை கோபாலபுரத்தில் உள்ள வேணுகோபால சாமி கோவிலில் சிறப்பு அலங்காரம் நடந்தது. கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள இஸ்கான் கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி சிறப்பு வழிபாடு நடந்தது. பஜனை, கீர்த்தனைகளில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர். கிருஷ்ணர் ஊஞ்சலில் ஆடுவது போன்றவை காட்சிப்படுத்தப்பட்டிருந்தது அனைவரையும் கவரும் வகையில் இருந்தது.
சென்னை எழும்பூரில் கிருஷ்ண பால கோகுல நண்பர்கள் குழு சார்பில் ராதை, கிருஷ்ணர் வேடம் அணிந்த குழந்தைகள் மாட்டு வண்டியில் வலம் வந்தனர். சீனிவாச பெருமாள் கோவிலில் இருந்து அய்யப்பன் கோவில் வரையில் இந்த நிகழ்ச்சி நடந்தது. வழியெங்கும் கிருஷ்ணர் பாடல்கள் பாடப்பட்டு, உற்சாகமாக கொண்டாடப்பட்டது.
சென்னை மற்றும் புறநகர் பகுதியில் உள்ள கிருஷ்ணர் கோவில்களிலும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. வீடுகளில் தங்கள் குழந்தைகளுக்கு கிருஷ்ணர், ராதை வேடம் அணிவித்து, மக்கள் கிருஷ்ணரை வழிபட்டனர். கொழுக்கட்டை, சர்க்கரை பொங்கல் படைத்து கிருஷ்ணரை வழிபட்ட காட்சிகளை பார்க்க முடிந்தது. பல்வேறு பகுதியில் உறியடி போட்டிகளும், குழந்தைகளுக்கான போட்டிகளும் நடத்தப்பட்டன.