< Back
மாநில செய்திகள்
குன்னூர்-மேட்டுப்பாளையம் செல்லும் வழியில்: நீலகிரி மலை ரெயில் தடம் புரண்டது
மாநில செய்திகள்

குன்னூர்-மேட்டுப்பாளையம் செல்லும் வழியில்: நீலகிரி மலை ரெயில் தடம் புரண்டது

தினத்தந்தி
|
9 Jun 2023 3:00 AM IST

குன்னூரில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும்போது நீலகிரி மலை ரெயில் தடம் புரண்டது. அதிர்ஷ்டவசமாக சுற்றுலா பயணிகள் உயிர் தப்பினர்.

ஊட்டி,

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் - நீலகிரி மாவட்டம் ஊட்டி இடையே மலை ரெயில் சேவை இயக்கப்பட்டு வருகிறது. இந்தியா மட்டுமின்றி பல்வேறு வெளிநாடுகளில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் மலை ரெயிலில் ஆர்வமுடன் பயணம் செய்து வருகின்றனர்.

தற்போது கோடை சீசனில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகமாக உள்ளது. இதனால் ஜூன் மாதம் இறுதி வரை மலை ரெயிலில் பயணம் செய்ய சுற்றுலா பயணிகள் முன்பதிவு செய்து காத்திருந்து பயணம் செய்து வருகின்றனர்.

தடம் புரண்டதால் பரபரப்பு

இந்தநிலையில் நேற்று ஊட்டியில் இருந்து 2.30 மணிக்கு 174 சுற்றுலா பயணிகளுடன் கிளம்பிய நீலகிரி மலை ரெயில், குன்னூர் ரெயில் நிலையம் சென்றடைந்தது. இதைத் தொடர்ந்து குன்னூரில் இருந்து மேட்டுப்பாளையத்திற்கு சுற்றுலா பயணிகளுடன் 3.30 மணி அளவில் மலை ரெயில் புறப்பட்டது.

அப்போது குன்னூரில் இருந்து 100 மீட்டர் தூரம் சென்றபோது திடீரென்று கடைசி பெட்டியின் சக்கரங்கள் தண்டவாளத்தில் இருந்து கீழே இறங்கி தடம் புரண்டது. இதையடுத்து மலைரெயில் தண்டவாளத்தில் அப்படியே நின்று விட்டது. இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ரெயில்வே அதிகாரிகள் ஆய்வு செய்தனர். இதை தொடர்ந்து மலை ரெயில் இயக்குவதில் பாதிப்புகள் ஏற்படும் அபாயம் உள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுற்றுலா பயணிகளை மலை ரெயிலில் இருந்து இறக்கி பஸ் மூலமாக மேட்டுப்பாளையம் அனுப்பி வைத்தனர். மேலும், தடம் புரண்ட பெட்டியை மீட்கும் பணியில் ரெயில்வே பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

உயிர்தப்பினர்

மலை ரெயிலில் பயணம் செய்த சுற்றுலா பயணிகள் கூறுகையில், நீலகிரி மலை ரெயிலில் பயணம் செய்வதற்காக பல மாதங்களுக்கு முன்பே டிக்கெட் முன்பதிவு செய்து காத்திருந்தோம். பாதிதூரம் செல்லும் போது வழியில் விபத்து ஏற்பட்டது பெரிய அதிர்ச்சியாகிவிட்டது. நல்ல வேலையாக எந்த வித அசம்பாவிதமும் ஏற்படாமல் உயிர் தப்பிவிட்டோம் என்றனர்.

ஒடிசா ரெயில் விபத்து சம்பவம் மக்கள் மனதில் இருந்து இன்னும் நீங்காத நிலையில், நீலகிரி மலை ரெயில் தடம் புரண்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நேற்று முன்தினம் பெய்த மழை காரணமாக தண்டவாளம் ஈரமாக இருந்ததால் இந்த சம்பவம் ஏற்பட்டு இருக்கலாம் என்று முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும் செய்திகள்