பெரம்பலூர்
நெல்லில் எழுத வைத்து பள்ளிகளில் மாணவர் சேர்க்கை
|நெல்லில் எழுத வைத்து பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடைபெற்றது.
'அ' எழுத வைத்து...
சரஸ்வதி பூஜைக்கு மறுநாள் விஜயதசமி தினத்தன்று குழந்தைகளை பள்ளியில் சேர்த்தால், அவர்களால் சிறந்த கல்வியை தடையின்றி பெற முடியும் என்ற நம்பிக்கை மக்களிடம் உள்ளது. கல்வி ஆண்டு தொடக்கமான ஜூன் மாதம் பள்ளியில் சேர்ப்பதற்குரிய வயதை சில குழந்தைகள் எட்டியிருந்தாலும், விஜயதசமி தினத்தன்று பள்ளியில் சேர்ப்பதையே சில பெற்றோர்கள் விரும்புகின்றனர்.
அதன்படி பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளிகள் உள்ளிட்ட பல பள்ளிகளில் விஜயதசமி தினமான நேற்று மாணவர் சேர்க்கை நடைபெற்றது. பல தனியார் பள்ளிகளுக்கு பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை அழைத்து வந்தனர். மேலும் பெற்றோர்கள் தங்களது குழந்தையின் கை விரலை பிடித்து, தட்டில் பரப்பி வைக்கப்பட்டிருந்த நெல்மணிகள் மீது தமிழ் மொழியின் முதல் எழுத்தான 'அ' என்ற எழுத்தை எழுத பழகிக்கொடுத்தனர்.
அங்கன்வாடியிலும் குழந்தைகள் சேர்க்கை
பின்னர் அந்த மாணவ-மாணவிகளை பள்ளிகளில் சேர்த்துக்கொண்டனர். இதற்காக விடுமுறை நாள் என்றாலும் நேற்று பல பள்ளிகள் திறக்கப்பட்டிருந்தன. இதேபோல் தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறையின் உத்தரவின்படி அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளிகளிலும் விஜயதசமியையொட்டி மாணவர் சேர்க்கை நடைபெற்றது.
பெரம்பலூர் மதனகோபாலசுவாமி கோவிலில் உள்ள சரஸ்வதி சன்னதி முன்பு பெற்றோர்கள் தங்களது குழந்தைகளுக்கு நெல்மணிகள் மீது 'அ' என்ற எழுத்தை எழுத பழகிக்கொடுத்தனர். இதேபோல் அங்கன்வாடி மையங்களிலும் குழந்தைகள் சேர்க்கை நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
அரியலூரில்...
இதேபோல், அரியலூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு தனியார் மற்றும் அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகள், அங்கன்வாடி மையங்களில் நேற்று வித்யாரம்பம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதையொட்டி தங்கள் குழந்தைகளை பெற்றோர்கள், பள்ளிகளுக்கு அழைத்து வந்து, அங்கு தட்டில் வைக்கப்பட்டிருந்த அரிசி, நெல் போன்றவற்றில் `அ' என்ற எழுத்தை எழுத சொல்லிக்கொடுத்தனர். பின்னர் அவர்களை பள்ளியில் சேர்ந்தனர். இதில் பல்வேறு பள்ளிகளில் மாணவ, மாணவிகள் புதிதாக சேர்த்தனர்.