புதுக்கோட்டை
குழந்தைகளை நெல் மணிகளில் எழுத வைத்து பள்ளிகளில் சேர்ப்பு
|விஜயதசமி தினத்தன்று நெல் மணிகளில் எழுத வைத்து பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடைபெற்றது.
நவராத்திரி விழா
நவராத்திரி விழா கடந்த 15-ந் தேதி தொடங்கி நடைபெற்றது. விழாவின் முக்கிய பண்டிகையான ஆயுத பூஜை நேற்று கொண்டாடப்பட்டது. புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆயுத பூஜை சிறப்பாக கொண்டாடப்பட்டது.
இதையொட்டி புதுக்கோட்டையில் அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜை நடைபெற்றது. மேலும் சிறப்பு அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவில் 10-ம் நாளான இன்று விஜயதசமி பண்டிகை கொண்டாடப்பட்டது. கல்விக்கு உகந்தநாளாக விஜயதசமி கருதப்படும் இந்நாளில் மழலை குழந்தைகளை முதல் முதலாக நெல் மணியில் தாய் மொழியில் முதல் எழுத்தான `அ' வை எழுத வைப்பது உண்டு. இதனை வித்யாரம்பம் என அழைக்கப்படுவது உண்டு. பின்னர் பள்ளிகளில் முதல் வகுப்பில் குழந்தைகளை சேர்ப்பார்கள்.
நெல் மணியில் அ எழுத்தை எழுதி...
இந்த நிலையில் விஜயதசமி பண்டிகையையொட்டி புதுக்கோட்டையில் சாந்தநாதசாமி கோவிலில் சரஸ்வதி சன்னதி முன்பு குழந்தைகளை நெல் மணிகளில் எழுத வைக்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.
இதில் பெற்றோர் பலர் தங்களது மழலை குழந்தைகளை கோவிலுக்கு அழைத்து வந்திருந்தனர். மேலும் சரஸ்வதி சன்னதியில் நெல் மணியில் `அ' எழுத்தை தங்களது குழந்தைகளின் கைகளை பிடித்து பெற்றோர் எழுத கற்றுக்கொடுத்தனர். குழந்தைகளும் `அ' எழுத்தை எழுதினர். மேலும் எழுதுபொருட்கள், நோட்டுகள் வைத்து சரஸ்வதி அம்மனை வழிப்பட்டனர். பின்னர் சரஸ்வதிக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது.
முதலாம் வகுப்பு
இதேபோல தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறையின் உத்தரவின்படி அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளிகளிலும் விஜயதசமியையொட்டி மாணவர் சேர்க்கை நடைபெற்றது. விஜயதசமியையொட்டி அரசு பள்ளிகளில் முதலாம் வகுப்பு மாணவர் சேர்க்கை நடைபெற்றது. மேலும் தனியார் பள்ளிகளில் எல்.கே.ஜி. வகுப்புகளில் மாணவர்கள் சேர்க்கை நடைபெற்றது. பொதுமக்கள் பலர் தங்களது குழந்தைகளை முதன் முதலாக பள்ளிகளில் சேர்த்தனர்.
ஆலங்குடி
ஆலங்குடியில் பெற்றோர்கள் தங்களுடைய குழந்தைகளை பள்ளி மற்றும் அங்கன்வாடிக்கு அழைத்து வந்தனர். பின்னர் ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களை கொண்டு குழந்தைகளுக்கு நெல்மணி, அரிசிகளில் அ வார்த்தையை எழுத வைத்து அவர்களது கல்வி பயணத்தை தொடங்கி வைத்தனர். இதேேபால் ஆலங்குடி சிவன்கோவில், அங்கன்வாடி மையத்தில் புதிதாக 10 குழந்தைகளை நெல்மணிகள், அரிசிகளில் எழுதியும், திருக்குறள் கூறியும் தங்களது கல்வி பயணத்தை தொடங்கினர்.
கறம்பக்குடி
விஜயதசமி விழாவை முன்னிட்டு முதல் முறையாக கறம்பக்குடி மழலையர் பள்ளிக்கு சென்ற சிறுமிகள் "அ" எழுத்தை கரும் பலகையில் எழுதி கற்றல் பணியை தொடங்கினர்.