கடலூர்
ரேஷன் கடைகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி
|கடலூர் மாவட்டத்தில் வருகிற 1-ந்தேதி முதல் அனைத்து ரேஷன் கடைகளிலும் குடும்ப அட்டைதாரர்களுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வினியோகம் செய்யப்பட உள்ளதாக கலெக்டர் தெரிவித்துள்ளார்.
கடலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் வருகிற 1-ந்தேதி முதல் குடும்ப அட்டை தாரர்களுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வினியோகம் செய்யப்பட உள்ளது. மத்திய அரசு மதிய உணவுத்திட்டம் மற்றும் குழந்தைகள் வளர்ச்சித்திட்டம் ஆகியவற்றின் மூலம் பயன் பெற்று வரும் குழந்தைகளுக்கு கடந்த ஜூலை 2022 முதல் செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது.
தற்போது பொதுவினியோகத் திட்டத்தின் மூலம் பயன் பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கும் வருகிற 1-ந்தேதி முதல் செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கப்பட உள்ளது. செறிவூட்டப்பட்ட அரிசியில் இரும்பு, போலிக் அமிலம் மற்றும் வைட்டமின் பி 12 உள்ளடக்கிய நுண்ணூட்டச்சத்து சேர்த்து செறிவூட்டப்பட்ட அரிசி மணிகளாக தயார் செய்து, அதனை சாதாரண அரிசியுடன் 1:100 என்ற விகிதத்தில் கலவை செய்து செறிவூட்டப்பட்ட அரிசியாக மாற்றி கடந்த 1.7.2022 முதல் குழந்தைகள் வளர்ச்சித்திட்டம் மற்றும் மதிய உணவுத்திட்டம் ஆகியவற்றிற்கு வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
வருகிற 1-ந்தேதி முதல் அமல்
செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் திட்டம் தமிழ்நாட்டில் திருச்சி, திருநெல்வேலி, விருதுநகர், ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் அறிமுகம் செய்யப்பட்டு பொது வினியோகத் திட்டத்தின் மூலம் ரேஷன் கடையில் வழங்கப்பட்டு வருகிறது.
கடலூர் மாவட்டத்தில் வருகிற 1-ந்தேதி முதல் செறிவூட்டப்பட்ட அரிசி இந்திய உணவுக்கழகத்தில் இருந்து பெறப்பட்டு ரேஷன் கடைகள் மூலம் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட உள்ளதாக கலெக்டர் பாலசுப்பிரமணியம் தெரிவித்தார். மேலும் அனைத்து ரேஷன் கடைகளிலும் செறிவூட்டப்பட்ட அரிசியின் நன்மைகளை உள்ளடக்கிய அறிவிப்புகள் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் கடலூரில் செறிவூட்டப்பட்ட அரிசியில் இருந்து தயார் செய்யப்பட்ட உணவை பொதுமக்களுக்கு மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியம் வழங்கி தொடங்கி வைத்து, செறிவூட்டப்பட்ட அரிசியில் இரும்புச்சத்து, போலிக் அமிலம் மற்றும் வைட்டமின் பி-12 ஆகிய மூன்றும் உள்ளது. ஆகவே ஊட்டச்சத்து குறைபாடுகளை களைந்து ரத்தச்சோகையில்லா நிலையினை உருவாக்கி ஆரோக்கியமான சமுதாயத்தை உருவாக்குவோம் என்றார்.