எண்ணூர் வாயு கசிவு.. பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடு வழங்க தமிழ்நாடு அரசு முடிவு!
|இழப்பீடு தொகை தொடர்பாக ஒரு சில நாட்களில் இறுதி முடிவு எடுக்கப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
சென்னை,
சென்னை எண்ணூர் அருகே பெரியகுப்பம் பகுதியில் உள்ள கோரமண்டல் தொழிற்சாலையில் இருந்து வாயு கசிவு ஏற்பட்டதால் அந்த பகுதியில் வசித்து வந்த பொதுமக்களுக்கு மூச்சுத்திணறல், வாந்தி, மயக்கம், கண் எரிச்சல் உள்ளிட்ட உடல் உபாதைகள் ஏற்பட்டன.
இதைத்தொடர்ந்து ஆலையை தற்காலிகமாக மூட தமிழக அரசு உத்தரவிட்டது. வாயு கசிவு தொடர்பாக தென் மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் தாமாக முன்வந்து வழக்காக எடுத்து விசாரித்து வருகிறது.
இதற்கிடையில், அமோனியா கசிவு விவகாரத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பாக முதல்-அமைச்சரின் தனி செயலாளர் தலைமையில் நேற்று விரிவான ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் அனைத்து துறைகளின் உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர். இந்த கூட்டத்தில், வாயு கசிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடு வழங்குவது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது.
இந்த நிலையில், எண்ணூர் தொழிற்சாலையில் ஏற்பட்ட அமோனியா கசிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடு வழங்க தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. இழப்பீடு தொகை தொடர்பாக ஒரு சில நாட்களில் இறுதி முடிவு எடுக்கப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.