< Back
மாநில செய்திகள்
எண்ணூர் வாயுக்கசிவு விவகாரம்: தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயம் தாமாக முன்வந்து விசாரணை
மாநில செய்திகள்

எண்ணூர் வாயுக்கசிவு விவகாரம்: தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயம் தாமாக முன்வந்து விசாரணை

தினத்தந்தி
|
27 Dec 2023 12:38 PM IST

எண்ணூரில் வாயுக்கசிவு ஏற்பட்ட கோரமண்டல் உரத்தொழிற்சாலையை தற்காலிகமாக மூட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

சென்னை,

சென்னை எண்ணூர் அருகே பெரியகுப்பம் பகுதியில் கோரமண்டல் உரத்தொழிற்சாலை உள்ளது. இந்த தொழிற்சாலைக்கு கப்பல் மூலம் திரவ அமோனியா எடுத்துவர ஏதுவாக கடலில் இருந்து தொழிற்சாலைவரை குழாய் அமைக்கப்பட்டுள்ளது.

தொழிற்சாலையில் இருந்து நள்ளிரவு 12 மணியளவில் திடீரென வாயுக்கசிவு ஏற்பட்டது. வாயுக்கசிவால் தொழிற்சாலைக்கு அருகில் வசித்து வந்த பொதுமக்களுக்கு மூச்சுத்திணறல், வாந்தி, மயக்கம், கண் எரிச்சல் உள்ளிட்ட உடல் உபாதைகள் ஏற்பட்டன. வாயுக்கசிவால் பாதிக்கப்பட்ட 30-க்கும் மேற்பட்டோர் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

உரத்தொழிற்சாலைக்கு திரவ அமோனியா எடுத்துவரும் குழாயில் அமோனியா வாயு கசிந்துள்ளதாக மாசு கட்டுப்பாட்டு வாரியம் உறுதி செய்தது. இதையடுத்து, கோரமண்டல் உரத்தொழிற்சாலையை தற்காலிகமாக மூட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் வாயுக்கசிவு தொடர்பாக ஆய்வுக்குழு தாக்கல் செய்யும் அறிக்கையின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், எண்ணூர் கோரமண்டல் ஆலையில் ஏற்பட்ட அமோனியா வாயுக்கசிவு விவகாரம் தொடர்பாக தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயம் தாமாக முன்வந்து வழக்காக எடுத்து விசாரிக்க முடிவு செய்துள்ளது. இந்த வழக்கு அடுத்த மாதம் (ஜனவரி) 2-ம் தேதி விசாரணைக்குப் பட்டியலிடப்படுகிறது.

மேலும் செய்திகள்