< Back
மாநில செய்திகள்
எண்ணூர் வாயு கசிவு விவகாரம்; போராட்டம் நடத்தியவர்கள் மீதான வழக்குகளை ரத்து செய்ய வேண்டும் - முத்தரசன் வலியுறுத்தல்
மாநில செய்திகள்

எண்ணூர் வாயு கசிவு விவகாரம்; போராட்டம் நடத்தியவர்கள் மீதான வழக்குகளை ரத்து செய்ய வேண்டும் - முத்தரசன் வலியுறுத்தல்

தினத்தந்தி
|
2 Jan 2024 6:26 PM IST

போராட்டம் நடத்தி வரும் மக்களை நேரில் சந்தித்து, அவர்களின் போராட்டத்திற்கு முத்தரசன் ஆதரவு தெரிவித்தார்.

சென்னை,

சென்னை எண்ணூர் அருகே பெரியகுப்பம் பகுதியில் உள்ள கோரமண்டல் ரசாயன தொழிற்சாலையில் இருந்து வாயு கசிவு ஏற்பட்டதால் பொதுமக்கள் பலருக்கு மூச்சுத்திணறல், வாந்தி, மயக்கம், கண் எரிச்சல் உள்ளிட்ட உடல் உபாதைகள் ஏற்பட்டன.

இதையடுத்து ஆலையை தற்காலிகமாக மூட தமிழக அரசு உத்தரவிட்டது. இந்த ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி பொதுமக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் மீது போடப்பட்ட வழக்குகளை திரும்பப் பெற வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் வலியுறுத்தியுள்ளார்.

முன்னதாக ஆலைக்கு எதிராக போராட்டம் நடத்தி வரும் மக்களை நேரில் சந்தித்து போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்த முத்தரசன், பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது;-

"இங்குள்ள மக்கள் தங்கள் உயிருக்காக அமைதியான முறையில் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் காவல்துறையினர் அவர்கள் மீது வழக்கு போடுவது சரியல்ல. எனவே, போராட்டம் நடத்தியவர்கள் மீது போடப்பட்டுள்ள அனைத்து வழக்குகளையும் அரசு திரும்பப் பெற வேண்டும் என வற்புறுத்தி கேட்டுக் கொள்கிறேன்."

இவ்வாறு முத்தரசன் தெரிவித்தார்.


மேலும் செய்திகள்