எண்ணூர் கோரமண்டல் தொழிற்சாலை மீண்டும் இயங்குவதற்கான அனுமதியை வழங்கக் கூடாது - சீமான்
|பணம் கொடுத்துப் போராட்டத்தினை ஒடுக்க நினைக்கும் ஆலை நிர்வாகத்தின் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சீமான் கூறியுள்ளார்.
சென்னை,
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-
எண்ணூர் கோரமண்டல் ஆலையை எதிர்த்துப் போராடும் மக்களின் கோரிக்கைகளையும் குரலினையும் நசுக்கும் விதமாக அவர்களுக்கு வலுக்கட்டாயமாகப் பணம் கொடுத்துப் போராட்டத்தினை ஒடுக்க நினைக்கும் ஆலை நிர்வாகத்தின் மீதும், அதற்குத் துணைபுரியும் நபர்களின் மீதும் தமிழ்நாடு அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சென்ற 2023-ம் ஆண்டின் இறுதியில், எண்ணூர் பகுதியில் உள்ள கோரமண்டல் உரத் தொழிற்சாலையிலிருந்து அம்மோனியா வாயு கசிவு ஏற்பட்டதன் காரணமாக, 42-க்கும் மேற்பட்டோர் மூச்சுத் திணறலினால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதோடு பலரும் இதனால் பெரிதும் பாதிக்கப்பட்டனர். இதனையடுத்து, தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியம் விதித்தத் தடையின் பெயரில் ஆலை தற்காலிகமாக மூடப்பட்டிருந்தது. இச்சிக்கலைத் தாமாக முன்வந்து வழக்காகப் பதிந்த தேசியப் பசுமைத் தீர்ப்பாயம், தமிழ்நாடு அரசின் தொழிலகப் பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்கம் மற்றும் தமிழ்நாடு கடல்சார் வாரியம் ஆகியத் துறைகளிடம் அனுமதிபெற்ற பின் அம்மோனியா குழாய் இயக்கம் தொடரலாம் என்று தீர்ப்பளித்தது. இந்நிலையில், ஆலை நிரந்தரமாக மூடப்பட வேண்டும் என்று தொடர்ச்சியாகப் பாதிக்கப்பட்ட 33 கிராம மக்கள் தொடர்ந்து போராடி வந்தனர்.
அண்மையில், இணைய இதழ் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியின் அடிப்படையில், போராடும் மக்களை வலுக்கட்டாயமாக விலைக்கு வாங்கும் நடவடிக்கையில் கோரமண்டல் ஆலை இறங்கியுள்ளது தெளிவாகிறது. கோரமண்டல் ஆலையிடமிருந்து பெறப்பட்ட 5.92 கோடி ரூபாய் இழப்பீட்டுத் தொகை சட்டபூர்வமாக தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியத்திடம் இருக்கும் நிலையிலும்கூட மறைமுகமாக, சட்டத்திற்குப் புறம்பான வழியில் கோடிக்கணக்கான ரூபாய் மக்களிடம் பகிர்ந்து கொடுக்க கோரமண்டல் ஆலை முனைவதும் அதற்கு அதிகார வட்டம் துணை போவதும் தெரிய வந்துள்ளது. இது அப்பட்டமான மக்களாட்சிக்கு எதிரான போக்காகும்.
மக்களை நேரில் சந்தித்து அவர்களின் குறைகளைக் கேட்டறிந்து அவர்களின் கோரிக்கைக்கு ஏற்ப நடவடிக்கை எடுப்பதன் வழியே போராட்டத்தினை முடிவுக்கு கொண்டு வர வேண்டிய தமிழ்நாடு அரசு இத்தனை காலம் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அமைதிகாத்து வருவது ஒருபுறம் என்றால், தேசியப் பசுமைத் தீர்ப்பாயம் உரிய வழிமுறைகளைக் காட்டிய பின்னும் அதில் கவனம் செலுத்தாமல் மக்களுக்கு மறைமுகமாகப் பணம் கொடுத்து அவர்களின் போராட்டங்களை மழுங்கடிக்க செய்து எப்படியாவது இயங்க வேண்டும் என்று துடிக்கும் ஆலை மறுபுறம்.
தொடக்கத்தில் மக்கள் பாதிக்கப்பட்ட வேளையில் அவர்களுக்குத் துணையாக நிற்பது போல் காட்டிக்கொண்ட திருவொற்றியூர் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் வடசென்னை நாடாளுமன்ற உறுப்பினர் ஆகியோர் அப்போது இந்த ஆலை நிரந்தரமாக மூடப்பட வேண்டும் என்ற கோரிக்கையை வைத்தாலும், தற்பொழுது ஆலை மீண்டும் இயங்குவதற்கான அதிகாரம் தமிழ்நாடு அரசு கையில் இருக்கும் நிலையில் அது குறித்து ஒரு வார்த்தை கூட பேசாமல் அமைதிகாப்பது அவர்கள் ஆலை திறப்பதற்குத் துணைபோவதாக வரக்கூடிய செய்தியை உறுதிப்படுத்தும் விதமாகவே உள்ளது.
'Polluter Pays' என்ற பன்னாட்டு சூழலியல் கோட்பாட்டிற்கு மாறாக தமிழ்நாட்டில் 'Polluter Bribes or Buys' என்ற தரமற்ற எடுத்துக்காட்டு உருவாகியுள்ள சூழ்நிலையில், இதற்குத் துணைபோகக் கூடிய தி.மு.க. அரசு மக்களாட்சி மாண்பையும் காலில் போட்டு மிதிக்கின்றது. இனியும் இந்நிலை தொடராமல் தொழிற்சாலை நலனைப் பின்னுக்குத் தள்ளி பொதுமக்கள் மற்றும் சூழலியல் நலனை முன்னிலைப்படுத்தி மேலெழும்பியுள்ள புகார் குறித்து உரிய நடவடிக்கையும், உண்மை உறுதிப்படுத்தப்படும் நிலையில் தவறிழைத்தவர்களுக்கும் அதற்குத் துணை போனவர்களுக்கும் உரிய தண்டனையும் பெற்றுத்தர வேண்டுமென்றும், கோரமண்டல் தொழிற்சாலை மீண்டும் இயங்குவதற்கான அனுமதியை வழங்கக் கூடாது என்றும் நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.