எண்ணூர்: அமோனியா வாயு கசிவு ஏற்பட்ட இடத்தில் அதிகாரிகள் குழு ஆய்வு
|உரத்தொழிற்சாலைக்கு திரவ அமோனியா எடுத்துவரும் குழாயில் அமோனியா வாயு கசிந்துள்ளதாக மாசு கட்டுப்பாட்டு வாரியம் உறுதி செய்தது.
சென்னை,
சென்னை எண்ணூர் அருகே பெரியகுப்பம் பகுதியில் கோரமண்டல் உரத்தொழிற்சாலை உள்ளது. இந்த தொழிற்சாலைக்கு கப்பல் மூலம் திரவ அமோனியா எடுத்துவர ஏதுவாக கடலில் இருந்து தொழிற்சாலைவரை குழாய் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த தொழிற்சாலையில் இருந்து நள்ளிரவு 12 மணியளவில் திடீரென வாயுக்கசிவு ஏற்பட்டது. இதனால் தொழிற்சாலைக்கு அருகில் வசித்து வந்த பொதுமக்களுக்கு மூச்சுத்திணறல், வாந்தி, மயக்கம், கண் எரிச்சல் உள்ளிட்ட உடல் உபாதைகள் ஏற்பட்டன. வாயுக்கசிவால் பாதிக்கப்பட்ட 30-க்கும் மேற்பட்டோர் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
உரத்தொழிற்சாலைக்கு திரவ அமோனியா எடுத்துவரும் குழாயில் அமோனியா வாயு கசிந்துள்ளதாக மாசு கட்டுப்பாட்டு வாரியம் உறுதி செய்தது. இதையடுத்து, குழாயில் ஏற்பட்ட உடைப்பை சரிசெய்து இனி தமிழ்நாடு கடல்சார் வாரியத்தின் ஒப்புதலோடு மட்டுமே குழாயை இயக்க வேண்டும் என மாசு கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவிட்டுள்ளது.
மேலும் பாதிக்கப்பட்ட இடங்களில் மக்களுக்கு மருத்துவ பராமரிப்பு மற்றும் சுகாதார ஆலோசனைகளை வழங்குவதற்காக 5 மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டது என தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்தது.
இந்த நிலையில் வாயு கசிவு ஏற்பட்ட இடத்தில அதிகாரிகள் குழுவினர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இதில் காலநிலை மாற்றம் மற்றும் சுற்றுசூழல் துறையை சார்ந்த 7 அதிகாரிகள் சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொன்டு வருகின்றனர். இந்த ஆய்வின் அடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.