பிரதமர் மோடியை எதிர்த்து போட்டியிட யாரும் இல்லை: அண்ணாமலை
|நாளைய தமிழகத்தை உருவாக்குவதே என் மண் என் மக்கள் யாத்திரையின் நோக்கம் என்று அண்ணாமலை கூறினார்.
உளுந்தூர்பேட்டை,
தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை என் மண் என் மக்கள் என்ற தலைப்பில் தமிழகம் முழுவதும் நடைபயணம் மேற்கொண்டு மக்களை சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார். அந்த வகையில் கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் நேற்று நடைபயணம் மேற்கொண்டார். சென்னை சாலையில் உள்ள பெட்ரோல் பங்கில் இருந்து தனது நடைபயணத்தை தொடங்கிய அண்ணாமலை அங்கிருந்து பஸ் நிலையம் வரை நடந்து சென்று மக்களை சந்தித்து ஆதரவு திரட்டினார். அப்போது வழி நெடுகிலும் தொண்டர்கள், பொதுமக்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
தொடர்ந்து பஸ் நிலையத்தில் திறந்த வேனில் நின்றவாறு தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் அவர் பேசியதாவது:-
உளுந்தூர்பேட்டை வளர்ச்சி இல்லாத தொகுதியாக உள்ளது. இந்த பகுதியைச் சேர்ந்த இளைஞர்களுக்கு படிப்புக்கேற்ற வேலை இல்லை, வேலைக்கேற்ற ஊதியம் இல்லை. உளுந்தூர்பேட்டையில் சிப்காட் இருந்தும் வேலை இல்லாத நிலை உள்ளது. மக்களின் முன்னேற்றத்திற்காக அரசியல் இல்லை. சாமானிய மக்கள் முன்னேற வேண்டும் என்பதற்காக ஆட்சி இல்லை. எனவே சாதி அரசியல், ஊழல் அரசியல், அடாவடித்தனமான அரசியல், குடும்ப அரசியல் ஆகியவற்றை உடைத்தெறிய வேண்டும். இதற்கு 2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் பொன்னான வாய்ப்பாக அமைய உள்ளது.
எந்த ஒரு சமுதாயம் கல்வியை முன்னேற்றத்திற்காக படிக்க வைக்கிறார்களோ, அந்த சமுதாயம் மட்டுமே முன்னேறும். நாளைய தமிழகத்தை உருவாக்குவதே இந்த யாத்திரையின் நோக்கம்.
உளுந்தூர்பேட்டை சிப்காட்டில் ரூ.2 ஆயிரத்து 32 கோடியில் முதலீடு செய்து 20 ஆயிரம் பேருக்கு வேலை கிடைக்கும் என்று கூறினார்கள். ஆனால் ஒருவருக்கும் வேலை கிடைக்கவில்லை. தேர்தல் வாக்குறுதியில் தி.மு.க. ஆட்சி அமைந்தால் 3 லட்சத்து 50 ஆயிரம் பேருக்கு அரசு வேலை கிடைக்கும் என்று கூறினார்கள். ஆனால் தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்று இரண்டரை ஆண்டுகள் ஆகியும் 10 ஆயிரத்து 323 பேருக்கு மட்டுமே அரசு வேலை கொடுத்து இருக்கிறார்கள்.
சென்னையில் தி.மு.க. எம்.எல்.ஏ. மகன் வீட்டில் உளுந்தூர்பேட்டையை சேர்ந்த இளம் பெண்ணுக்கு துன்புறுத்தல் நடைபெற்றுள்ளது. எனவே உளுந்தூர்பேட்டையை சேர்ந்த சகோதர, சகோதரிகள் தி.மு.க.வை மன்னிக்கக் கூடாது.
வளர்ச்சியை நோக்கி தமிழகம் செல்ல வேண்டும். 2024-ம் ஆண்டில் 400 எம்.பி.க்களையும் தாண்டி மீண்டும் மோடி ஆட்சிக்கு வருவது உறுதி. மோடியை எதிர்த்து போட்டியிட வேட்பாளர்கள் யாரும் இல்லை. மோடிக்கு எதிராக ஆளுமை தலைவர்கள் இல்லை. இந்த முறை உங்களுடைய வாக்கை பா.ஜனதா கட்சிக்கு, தேசிய ஜனநாயக கூட்டணிக்கு அளிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.