< Back
மாநில செய்திகள்
வண்டலூர் பூங்காவில் சிங்கங்கள் உலாவும் பகுதிக்கு பஸ்சில் சென்று ரசிக்கலாம்; வருகிற 2-ந்தேதி முதல் பொதுமக்கள் காண ஏற்பாடு
செங்கல்பட்டு
மாநில செய்திகள்

வண்டலூர் பூங்காவில் சிங்கங்கள் உலாவும் பகுதிக்கு பஸ்சில் சென்று ரசிக்கலாம்; வருகிற 2-ந்தேதி முதல் பொதுமக்கள் காண ஏற்பாடு

தினத்தந்தி
|
30 Sept 2023 1:46 PM IST

வண்டலூர் பூங்காவில் வருகிற 2-ந்தேதி முதல் சிங்கங்கள் உலாவும் பகுதிக்கு பஸ்சில் சென்று பொதுமக்கள் கண்டு ரசிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சென்னை அடுத்த வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் 170 வகைகளை சேர்ந்த 1977 வனவிலங்குகள் மற்றும் பறவைகள் பராமரிக்கப்படுகிறது. இதனை தினந்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் பார்த்து செல்கின்றனர். கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு கொரோனா தொற்று வேகமாக பரவி இருந்த காலகட்டத்தில் வண்டலூர் பூங்காவில் பொதுமக்கள் பார்த்து ரசித்து வந்த லயன் சபாரி பகுதி பார்வையாளர்கள் பார்க்க தடை செய்யப்பட்டு மூடப்பட்டது.

அதுமட்டுமின்றி லயன் சபாரி பகுதியில் பராமரிக்கப்பட்டு வந்த சிங்கங்கள் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தது. இதனால் கடந்த 3 ஆண்டுகளுக்கு மேலாக லயன் சபாரி பகுதி மூடப்பட்டு இருந்தது. தற்போது பூங்காவில் விலங்குகள் பரிமாற்ற திட்டத்தின் கீழ் கொண்டு வரப்பட்ட சில சிங்கங்களுடன் சேர்த்து சிங்கங்களின் எண்ணிக்கை 11-ஆக உள்ளது.

இந்த நிலையில் லயன் சபாரி பகுதியில் புதிதாக பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு அங்கு 3-க்கும் மேற்பட்ட சிங்கங்கள் உலாவ விட்டு பார்வையாளர்களை அழைத்து செல்லும் பேட்டரி வாகனங்கள் உள்ளே சென்று வருவது போன்ற சோதனை ஓட்டங்கள் தொடர்ந்து நடைபெற்றன.

வருகிற 2-ந்தேதி காந்தி ஜெயந்தியன்று 3 ஆண்டுகளுக்கு பிறகு பொதுமக்கள் பார்த்து ரசிப்பதற்காக லயன் சபாரி பகுதி திறக்கப்படுகிறது. இந்த லயன் சபாரி பகுதியை பொதுமக்கள் பாதுகாப்பான முறையில் பார்ப்பதற்காக பிரத்தியேகமாக அமைக்கப்பட்ட ஒரு ஏ.சி. பஸ் மற்றும் 2 சாதாரண ஏ.சி. இல்லாத பஸ்களும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக பார்வையாளர்கள் தனியாக கட்டணம் செலுத்தி டிக்கெட் பெற வேண்டும். எனவே 3 ஆண்டுகளுக்கு பிறகு சிங்கம் உலாவிடும் பகுதிக்கு வாகனத்தில் சென்று நேரடியாக சிங்கங்களை மிக அருகில் பார்த்து ரசிக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்