சேலம்
ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டம்: ஏற்காடு, மேட்டூர், பூலாம்பட்டியில் குவிந்த சுற்றுலா பயணிகள்
|ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டத்தையொட்டி, ஏற்காடு, மேட்டூர், பூலாம்பட்டியில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.
புத்தாண்டு கொண்டாட்டம்
கிறிஸ்துமஸ்- ஆங்கில புத்தாண்டு மற்றும் பள்ளிகளுக்கு அரையாண்டு விடுமுறை போன்ற காரணங்களால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், கேரளம், கர்நாடக மாநிலத்தில் இருந்தும் ஏற்காட்டுக்கு சுற்றுலா பயணிகளின் வருகை கடந்த ஒரு வாரமாக அதிகரித்து இருந்தது. இதனால் சுற்றுலா விடுதிகள் நிரம்பின.
இந்த நிலையில் நேற்று ஆங்கில புத்தாண்டை கொண்டாட சுற்றுலா பயணிகள் ஏற்காட்டுக்கு அதிகளவில் வந்தனர். குறிப்பாக படகு இல்லம், அண்ணா பூங்கா, ஏரி பூங்கா, லேடிஸ் சீட், தாவரவியல் பூங்கா, ரோஜா தோட்டம், பக்கோடா காட்சிமுனை, சேர்வராயன் கோவில் போன்ற பகுதிகளில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். படகு குழாமில் உற்சாகமாக படகு சவாரி செய்து மகிழ்ந்தனர்.
பண்டிகை மற்றும் விடுமுறை காரணமாக ஏற்காட்டிற்கு வாகனங்கள் அதிகளவில் வருவதால், மலைப்பாதையில் போக்குவரத்து நெரிசல்கள் அடிக்கடி ஏற்படுகிறது. இதையொட்டி போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
மேட்டூர்
இதேபோல் மேட்டூருக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் நேற்று தங்கள் குடும்பத்தினருடன் வந்து அணையின் அழகை கண்டு ரசித்தனர். மேலும் சுற்றுலா பயணிகள் மேட்டூர் அணைக்கட்டு முனியப்ப சாமி கோவிலில் சாமி தரிசனம் செய்து பூங்காவிற்கு சென்று பொழுதை கழித்தனர். சிறுவர்-சிறுமிகள் விளையாட்டு சாதனங்களில் விளையாடி மகிழ்ந்தனர்.
ஒரு சிலர் ஆடு, கோழி போன்றவற்றை முனியப்ப சாமிக்கு பலியிட்டு உணவு சமைத்து அந்த உணவை பூங்காவிற்கு எடுத்துச்சென்று நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் உண்டு மகிழ்ந்தனர். இதனால் அணைக்கட்டு முனியப்பன் கோவில் பூங்கா பகுதிகளில் சுற்றுலா பயணிகள் கூட்டமாக காட்சியளித்தது. நேற்று ஒரே நாளில் மட்டும் பூங்கா நுழைவு கட்டணமாக ரூ.59 ஆயிரத்து 140 வசூல் ஆகியிருந்தது.
பூலாம்பட்டி
எடப்பாடி அடுத்த பூலாம்பட்டி பகுதியில் காவிரி ஆற்றின் குறுக்கே பூலாம்பட்டி மற்றும் ஈரோடு மாவட்டம் நெருஞ்சிப்பேட்டை உள்ளிட்ட இரு பகுதிகளையும் இணைக்கும் வகையில், பெரிய அளவிலான தடுப்பணை கட்டப்பட்டு நீர் மின் உற்பத்தி நடைபெற்று வருகிறது. இந்த பகுதியில் உள்ள இயற்கை அழகை கண்டு ரசிக்கவும், கதவணை பகுதியில் விசைப்படகு சவாரி செய்து மகிழவும் நேற்று புத்தாண்டையொட்டி சுற்றுலா பயணிகள் அதிகளவில் வந்திருந்தனர்.
அணை பாலம், நீர் மின் உற்பத்தி நிலையம், படகுத்துறை, பரிசல்துறை, கைலாசநாதர் கோவில், நந்திகேஸ்வரர் சன்னதி, காவிரித்தாய் கோவில் உள்ளிட்ட பல்வேறு சுற்றுலா இடங்களை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர். தொடர்ந்து சுற்றுலா பயணிகள் கதவனை நீர் தேக்கப்பகுதியில் விசைப்படகுகளில் உற்சாகமாக படகு சவாரி செய்து மகிழ்ந்தனர்.