< Back
மாநில செய்திகள்
பொறியாளர்கள், பணியாளர்கள் காத்திருப்பு போராட்டம்
நீலகிரி
மாநில செய்திகள்

பொறியாளர்கள், பணியாளர்கள் காத்திருப்பு போராட்டம்

தினத்தந்தி
|
27 Sept 2022 12:15 AM IST

மின்வாரியத்தை தனியார் மயமாக்குவதை கண்டித்து மின்வாரிய உதவி பொறியாளர்கள், பணியாளர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கூடலூர்,

மின்வாரியத்தை தனியார் மயமாக்குவதை கண்டித்து மின்வாரிய உதவி பொறியாளர்கள், பணியாளர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

காத்திருப்பு போராட்டம்

மின்வாரியத்தை தனியார் மயமாக்குவதை கண்டித்தும், பஞ்சப்படி உயர்வை உடனடியாக வழங்க வேண்டும், மின்வாரிய உத்தரவு எண்.2-ஐ ரத்து செய்ய வேண்டும், கேங்மேன் பணியாளர்களுக்கு அனைத்து சலுகைகளும் வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி தமிழகம் முழுவதும் மின்வாரிய உதவி பொறியாளர்கள், பணியாளர்கள், ஊழியர்கள் நேற்று அலுவலகங்கள் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நீலகிரி மாவட்டம் கூடலூர் மைக்கா மவுண்ட் மின்வாரிய அலுவலகம் முன்பு நடைபெற்ற போராட்டத்திற்கு உதவி பொறியாளர் மஜித் தலைமை தாங்கினார். தொடர்ந்து அனைத்து சங்கங்களை உள்ளடக்கிய நிர்வாகிகள் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். இதில் உதவி பொறியாளர்கள், பணியாளர்கள், ஊழியர்கள் கலந்துகொண்டனர்.

ரத்து செய்ய வேண்டும்

இதேபோல் ஊட்டி மத்திய பஸ் நிலையம் அருகே உள்ள மின்வாரிய அலுவலகம் முன்பு அலுவலர்கள், பொறியாளர்கள், பணியாளர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு கூட்டுக்குழு நிர்வாகி பாபு தலைமை தாங்கினார். போராட்டத்தில் மின்வாரிய மத்திய சங்க செயலாளர் சண்முகம், சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் ரமேஷ், பொறியாளர் சங்க செயலாளர் சிவசங்கரன் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர்.

போராட்டத்தில் மின்வாரிய பணியாளர்களுக்கு கிடைக்க வேண்டிய பண பலன்களை மின்வாரியம் நஷ்டத்தில் இயங்குகிறது என்று கூறி பண பலன்களை நிராகரிக்ககூடிய உத்தரவாக புதிய உத்தரவு உள்ளது. இந்த உத்தரவை ரத்து செய்யும் வரை தொடர்ந்து போராட்டம் நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது. மின்வாரியம் பொது துறையாக நீடிக்க வேண்டும். நிறுத்தப்பட்ட சலுகைகள் உடனடியாக கிடைக்க பெற வேண்டும். மின்வாரிய சட்டதிருத்த மசோதாவை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டது.

பணிகள் பாதிப்பு

ஊட்டியில் 400-க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் கலந்துகொண்டனர். குன்னூர் உள்பட அனைத்து மின்வாரிய அலுவலகங்கள் முன்பு காத்திருப்பு போராட்டம் நடந்தது. மேலும் பணிகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டதால், அன்றாட பணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்