< Back
மாநில செய்திகள்
மழைநீர் வடிகால் பணிகள் தாமதமானால் சம்பந்தப்பட்ட பொறியாளர்களே பொறுப்பேற்க வேண்டும் - சென்னை மாநகராட்சி எச்சரிக்கை
மாநில செய்திகள்

"மழைநீர் வடிகால் பணிகள் தாமதமானால் சம்பந்தப்பட்ட பொறியாளர்களே பொறுப்பேற்க வேண்டும்" - சென்னை மாநகராட்சி எச்சரிக்கை

தினத்தந்தி
|
9 Jun 2022 2:39 PM IST

பணிகளை முறையாக செயல்படுத்தாவிட்டால் சம்பந்தப்பட்ட பொறியாளர்களே பொறுப்பேற்க வேண்டும் என சென்னை மாநகராட்சி நிர்வாகம் எச்சரித்துள்ளது.

சென்னை,

சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், பருவமழை தொடங்குவதற்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், மழைநீர் வடிகால் பணிகளை முறையாக செயல்படுத்த வேண்டும் என்றும், அவ்வாறு செயல்படுத்தாவிட்டால், சம்பந்தபட்ட பொறியாளர்களே அதற்கு பொறுப்பேற்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கட்டுமானம் தொடங்கி வடிகால் வரை மழைநீர் முறையாக செல்வதை உறுதி செய்ய வேண்டும் என சென்னை மாநகராட்சியின் அனைத்து மண்டல அலுவலர்களுக்கும், முதன்மை பொறியாளர்களுக்கும் இந்த சுற்றறிக்கை வாயிலாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மழைநீர் வடிகால் தொடர்பான அனைத்து பணிகளையும் முறையாக செய்வதோடு, அந்த பணிகளை சோதனை அடிப்படையில் ஆய்வு செய்ய வேண்டும் எனவும் சம்பந்தப்பட்ட பொறியாளர்களை இந்த சுற்றறிக்கை மூலம் சென்னை மாநகராட்சி நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.

மேலும் பணியை நிறைவு செய்வதற்கு முன்பாக மின்சார வாரியம், குடிநீர் வாரியம், பி.எஸ்.என்.எல்., ஆப்டிகல் ஃபைபர் கார்ப்பரேஷன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகங்களிடம் எழுத்துப்பூர்வமாக தெரிவிக்க வேண்டும் எனவும் இதன் அடிப்படையில் மழைநீர் வடிகால் பணிகளை முழுமையாக செயல்படுத்த வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவ்வாறு அந்த பணிகளை முறையாக செயல்படுத்தாமல் சுணக்கம் ஏற்பட்டு, மற்ற துறைகளுக்கு பாதிப்பை உருவாக்கினால், சம்பந்தப்பட்ட பொறியாளர்களே அதற்கு பொறுப்பேற்க வேண்டும் எனவும் சென்னை மாநகராட்சி நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

மேலும் செய்திகள்