< Back
மாநில செய்திகள்
என்ஜினீயரிங் கல்வி கட்டணம் உயர்கிறது; தொழில்நுட்ப கல்வி கவுன்சில் பட்டியல் வெளியீடு
மாநில செய்திகள்

என்ஜினீயரிங் கல்வி கட்டணம் உயர்கிறது; தொழில்நுட்ப கல்வி கவுன்சில் பட்டியல் வெளியீடு

தினத்தந்தி
|
23 May 2022 3:54 AM IST

என்ஜினீயரிங் கல்வி கட்டணம் உயர்கிறது. இது தொடர்பான பரிந்துரை பட்டியலை தொழில்நுட்ப கல்வி கவுன்சில் வெளியிட்டுள்ளது.

சென்னை,

பொதுவாக என்ஜினீயரிங், தொழில்நுட்ப படிப்புகளுக்கான கட்டணத்தை பொறுத்தவரையில், கல்வி கட்டணம், வளர்ச்சி கட்டணம், தேர்வு கட்டணம், பிற கட்டணம் என்ற அடிப்படையிலேயே வசூலிக்கப்படுகிறது.

கல்வி கட்டணத்தில் மனிதவளம், கற்றல் வளம், கம்ப்யூட்டர் மற்றும் தகவல் தொழில்நுட்ப உள்கட்டமைப்பு, செயல்பாட்டு செலவுகள், ஆய்வக நுகர்பொருட்கள், சான்றிதழ், அடையாள அட்டை உள்பட இதர கட்டணங்கள் வருகின்றன. வளர்ச்சி கட்டணத்தை பொறுத்தவரையில், அந்த நிறுவனத்தின் எதிர்கால விரிவாக்கம் மற்றும் மேம்பாட்டுக்காகவும், தொடர்ச்சியான செலவினங்களை கவனிப்பதற்கும் வசூலிக்கப்படுகிறது.

அந்த வகையில் என்ஜீனியரிங், தொழில்நுட்பம் சார்ந்த படிப்புகளுக்கான கட்டணங்களை அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் (ஏ.ஐ.சி.டி.இ.) பரிந்துரை செய்துள்ளது. இதே போன்று இந்த கல்லூரிகளில் பணியாற்றுகிற பேராசிரியர்கள், துணை பேராசிரியர்கள் ஊதியங்களையும் பரிந்துரைத்துள்ளது.

இதுபற்றிய பட்டியல் வருமாறு:-

3 ஆண்டு பட்டய படிப்புகள்

3 ஆண்டு என்ஜினீயரிங் மற்றும் தொழில்நுட்ப பட்டய படிப்புகளுக்கு குறைந்தபட்சம் ரூ.67 ஆயிரத்து 900, அதிகபட்சம் ரூ.1 லட்சத்து 40 ஆயிரத்து 900-ம், பயன்பாட்டுக்கலை மற்றும் கைவினைப்பொருட்கள் படிப்புக்கு குறைந்தபட்சம் ரூ.81 ஆயிரத்து 900, அதிகபட்சம் ரூ.1 லட்சத்து 64 ஆயிரத்து 700-ம், வடிவமைப்பு படிப்புக்கு குறைந்தபட்சம் ரூ.82 ஆயிரத்து 500, அதிகபட்சம் ரூ.1 லட்சத்து 61 ஆயிரத்து 500, ஓட்டல் மேலாண்மை மற்றும் கேட்டரிங் தொழில்நுட்ப படிப்புக்கு குறைந்தபட்சம் ரூ.67 ஆயிரத்து 900, அதிகபட்சம் ரூ.1 லட்சத்து 47 ஆயிரத்து 800-ம் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

4 ஆண்டு பட்ட படிப்புகள்

4 ஆண்டு இளநிலை பட்டப்படிப்புகளில், என்ஜினீயரிங் மற்றும் தொழில்நுட்பத்துக்கு குறைந்தபட்சம் ரூ.79 ஆயிரத்து 600, அதிகபட்சம் ரூ.1 லட்சத்து 89 ஆயிரத்து 800-ம், திட்டப்படிப்புக்கு குறைந்தபட்சம் ரூ.72 ஆயிரம், அதிகபட்சம் ரூ.2 லட்சத்து 16 ஆயிரத்து 110, பயன்பாட்டுக்கலை மற்றும் கைவினைப்பொருட்கள் படிப்புக்கு குறைந்தபட்சம் ரூ.1 லட்சத்து 49 ஆயிரத்து 300, அதிகபட்சம் ரூ.3 லட்சத்து 67 ஆயிரத்து 900-ம், வடிவமைப்பு படிப்புக்கு குறைந்தபட்சம் ரூ.1 லட்சத்து 33 ஆயிரத்து 500, அதிகபட்சம் ரூ.3 லட்சத்து 30 ஆயிரத்து 500, ஓட்டல் மேலாண்மை மற்றும் கேட்டரிங் தொழில்நுட்ப படிப்புக்கு குறைந்தபட்சம் ரூ.81 ஆயிரத்து 300, அதிகபட்சம் ரூ.1 லட்சத்து 91 ஆயிரத்து 200-ம் கட்டணம் நிர்ணயம் செய்து அறிவிக்கப்பட்டுள்ளது.

2 ஆண்டு முதுநிலை படிப்புகள்

2 ஆண்டு முதுநிலை பட்டப்படிப்புகளில் என்ஜினீயரிங் மற்றும் தொழில்நுட்பத்துக்கு குறைந்தபட்சம் ரூ.1 லட்சத்து 41 ஆயிரத்து 200, அதிகபட்சம் ரூ.3 லட்சத்து 4 ஆயிரம், திட்டப்படிப்புக்கு குறைந்தபட்சம் ரூ.2 லட்சத்து 11 ஆயிரத்து 900, அதிகபட்சம் ரூ.4 லட்சத்து 50 ஆயிரத்து 200, பயன்பாட்டுக்கலை மற்றும் கைவினைப்பொருட்கள் படிப்புக்கு குறைந்தபட்சம் ரூ.2 லட்சத்து 20 ஆயிரத்து 200, அதிகபட்சம் ரூ.4 லட்சத்து 49 ஆயிரத்து 900-ம், வடிவமைப்பு படிப்புக்கு குறைந்தபட்சம் ரூ.2 லட்சத்து 63 ஆயிரத்து 500, அதிகபட்சம் ரூ.5 லட்சத்து 57 ஆயிரத்து 100, ஓட்டல் மேலாண்மை மற்றும் கேட்டரிங் தொழில்நுட்ப படிப்புக்கு குறைந்தபட்சம் ரூ.1 லட்சத்து 83 ஆயிரத்து 400, அதிகபட்சம் ரூ.3 லட்சத்து 78 ஆயிரத்து 400-ம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

எம்.சி.ஏ. படிப்பு

எம்.சி.ஏ. (3 ஆண்டு) படிப்புக்கு குறைந்தபட்சம் ரூ.88 ஆயிரத்து 500, அதிகபட்சம் ரூ.1 லட்சத்து 94 ஆயிரத்து 100, மேலாண்மை படிப்புக்கு குறைந்தபட்சம் ரூ.85 ஆயிரம், அதிகபட்சம் ரூ.1 லட்சத்து 95 ஆயிரத்து 200-ம் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய கட்டணங்கள் ஏற்கனவே இருந்த பழைய கட்டணங்களை விட சற்று அதிகமாக இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.

மேலும் பேராசிரியர்கள், உதவி பேராசிரியர்களுக்கு 7-வது சம்பள கமிஷன் அடிப்படையில் ஊதியம் நிர்ணயம் செய்து அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்