< Back
மாநில செய்திகள்
மரம் அறுக்கும் ஆலைக்குள் புகுந்த என்ஜினீயர் அடித்துக்கொலை - திருட வந்ததாக நினைத்து வடமாநில தொழிலாளர்கள் வெறிச்செயல்
மாநில செய்திகள்

மரம் அறுக்கும் ஆலைக்குள் புகுந்த என்ஜினீயர் அடித்துக்கொலை - திருட வந்ததாக நினைத்து வடமாநில தொழிலாளர்கள் வெறிச்செயல்

தினத்தந்தி
|
3 Dec 2022 8:27 PM GMT

மரம்அறுக்கும் ஆலைக்குள் புகுந்த என்ஜினீயரை திருட வந்ததாக நினைத்து அடித்துக்கொலை செய்த வடமாநில தொழிலாளர்கள் 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

திருச்சி மாவட்டம், மணிகண்டம் அருகே அம்பேத்கர் நகர் பகுதியில் திருச்சி சஞ்சீவி நகரில் வசித்து வரும் குஜராத்தை சேர்ந்த திரேந்தர் (வயது42) என்பவருக்கு சொந்தமான மரம் அறுக்கும் ஆலை உள்ளது. இந்த ஆலையில் தங்கியிருந்து வடமாநில தொழிலாளர்கள் உள்பட 20-க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர். நேற்று முன்தினம் மாலை 6 மணியளவில் திரேந்தர் ஆலையில் உள்ள அலுவலக அறையில் பணியில் இருந்தபோது, அறைக்குள் வந்த வாலிபர் ஒருவர் திரேந்தரின் செல்போனை எடுத்துக் கொண்டு ஓட முயன்றார். இதனையடுத்து அங்கு இருந்தவர்கள் அவரை பிடித்து செல்போனை வாங்கிக்கொண்டு விரட்டி அடித்தனர்.

இந்த நிலையில் நள்ளிரவு 1 மணியளவில் மீண்டும் அந்த வாலிபர் மரம் அறுக்கும் ஆலையின் சுவர் ஏறி குதித்து உள்ளே நுழைந்தார். இதைபார்த்த அசாம் மாநில வாலிபர்கள் 4 பேர் அந்த வாலிபர் திருட வந்ததாக நினைத்து, அவரை பிடித்து கயிற்றால் ஒரு மரத்தில் கட்டி வைத்து தாக்கினர். பின்னர் அந்த வாலிபரை மரத்தில் கட்டியவாறு வைத்துவிட்டு 4 பேரும் தூங்க சென்றுவிட்டனர். காலையில் எழுந்து பார்த்தபோது அந்த வாலிபர் இறந்து கிடந்தார்.

இதுபற்றி தகவல் அறிந்த மணிகண்டம் போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினார்கள். இதில் இறந்தவர் திருச்சி துவாக்குடியை சேர்ந்த கண்ணன் மகன் சக்கரவர்த்தி (33) என்றும், என்ஜினீயரான இவருக்கு திருமணமாகி உமாமகேஸ்வரி என்ற மனைவியும், 6 மாதத்தில் ஒரு மகனும் உள்ளனர் என்பதும் தெரியவந்தது. மேலும் சக்கரவர்த்தி மது பழக்கத்திற்கு அடிமையாகி சிகிச்சை பெற்று வந்ததாகவும், கடந்த 2 நாட்களாக வீட்டில் இருந்த சக்கரவர்த்தி மனம் நலம் பாதிக்கப்பட்டவர் போல தனியாக பேசி வந்ததாகவும் தெரிகிறது.

நேற்று முன்தினம் காலை வீட்டிலிருந்து திடீரென தப்பி ஓடிய சக்கரவர்த்தி மணிகண்டம் பகுதிக்கு சென்று தான் என்ன செய்கிறோம் என்று தெரியாத நிலையில் மரம் அறுக்கும் ஆலைக்குள் நுழைந்தபோதுதான் வடமாநில தொழிலாளர்கள் தாக்கியதில் உயிரிழந்தது தெரியவந்தது. இதுதொடர்பாக போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து அசாம் மாநிலத்தை சேர்ந்த சோகிததுல்சேக் (22), பைசல் சாக் (36), மப்ஜில் ஹூக் (28), ரசீதுல் ரகுமான் (22) ஆகிய 4 பேரை கைது செய்தனர்.

மேலும் செய்திகள்