கள்ளக்குறிச்சி
மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த என்ஜினீயர் பலி
|கச்சிராயப்பாளையம் அருகே தனக்கு பிறந்த குழந்தையை பார்த்துவிட்டு சொந்த ஊருக்கு திரும்பி வந்த வழியில் மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த என்ஜினீயர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது
கச்சிராயப்பாளையம்
என்ஜினீயர்
கச்சிராயப்பாளையம் அருகே உள்ள தொட்டியம் கிராமத்தை சேர்ந்தவர் சுப்பிரமணியன் மகன் சுரேஷ்(வயது 25). மெக்கானிக் என்ஜினீயரான இவர் நாமக்கல்லில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். சுரேசுக்கு கடந்த ஆண்டு ஜூன் மாதம் திருமணம் நடைபெற்றது. அகில்மணி என்ற மனைவி உள்ளார்.
இந்த நிலையில் நிறைமாத கர்பிணியாக இருந்த அகில்மணி பிரசவத்துக்காக உலகாநத்தம் கிராமத்தில் உள்ள அவரது தாய் வீட்டுக்கு சென்றார். அங்கு நேற்று முன்தினம் அவருக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டதையடுத்து அவரை சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு ஆஸ்பத்திரியில் உறவினர்கள் சேர்த்தனர். அங்கு அவருக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது.
தவறி விழுந்து பலி
இதை அறிந்து மகிழ்ச்சி அடைந்த சுரேஷ் தனது குழந்தையை பார்த்து வருவதற்காக மோட்டார் சைக்கிளில் கள்ளக்குறிச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு சென்றார். அங்கு குழந்தையை பார்த்து விட்டு சில பொருட்களை எடுத்து வருவதற்காக தொட்டியம் கிராமத்துக்கு மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார்.
குதிரைச்சந்தல் பகுதியில் பழனிசாமி என்பவர் நிலத்தின் அருகே வந்த போது திடீரென நிலைதடுமாறி மோட்டார் சைக்கிளுடன் சுரேஷ் தவறி விழுந்தார். இதில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
கிராம மக்கள் சோகம்
இதுபற்றிய தகவல் அறிந்து வந்த கச்சிராயப்பாளையம் போலீசார் சுரேசின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தனக்கு பிறந்த குழந்தையை பார்த்துவிட்டு ஊருக்கு திரும்பிய வழியில் மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்து என்ஜினீயர் பலியான சம்பவம் தொட்டியம் கிராம மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.