சென்னை
அம்பத்தூரில் பூட்டிய வீட்டுக்குள் என்ஜினீயர் தூக்கில் பிணமாக மீட்பு
|அம்பத்தூரில் பூட்டிய வீட்டுக்குள் என்ஜினீயர் தூக்கில் பிணமாக தொங்கினார். அவரது தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் தெரிவித்தனர்.
நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்தவர் அருள் பாண்டியன் (வயது 28). என்ஜினீயரான இவர், 2016-ம் ஆண்டு முதல் அம்பத்தூர் அடுத்த புதூர், திருவள்ளுவர் தெருவில் தங்கி, சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இவர், கடந்த புதன்கிழமை இரவு தனது உடன் பிறந்த சகோதரரான கிண்டியில் வசிக்கும் சரவணனிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு கடைசியாக பேசினார்.
ஆனால் அதன்பிறகு 2 நாட்களாக அருள் பாண்டியனுக்கு பலமுறை சரவணன் போன் செய்தும் அவர் செல்போனை எடுக்கவில்ைல. இதனால் சரவணன், அருள் பாண்டியன் பணிபுரிந்த நிறுவனத்தை தொடர்பு கொண்டு கேட்டார். அவர்கள், 2 நாட்களாக அருள் பாண்டியன் வேலைக்கு வரவில்லை என்று கூறினர்.
இதனால் சந்தேகம் அடைந்த சரவணன், நேற்று முன்தினம் மாலை அம்பத்தூரில் அருள்பாண்டியன் வசித்த வீட்டுக்கு சென்றார். கதவு உள்புறமாக பூட்டப்பட்டு இருந்தது. கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தார். பூட்டிய வீட்டுக்குள் அருள் பாண்டியன், தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
கடைசியாக அவர் தனது அண்ணன் சரவணனிடம் செல்போனில் பேசி விட்டு பின்னர் தற்கொலை செய்து இருக்கலாம் என தெரிகிறது. இதனால் அவர் உடல் அழுகிய நிலையில் காணப்பட்டது.
அருள்பாண்டியன் திருமணம் ஆகாத விரக்தியில் தற்கொலை செய்து இருக்கலாம் என கூறப்படுகிறது. எனினும் இதுபற்றி அம்பத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அருள் பாண்டியனின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.