திருவண்ணாமலை
படவேட்டை சேர்ந்த என்ஜினீயர் மலேசியாவில் மர்மமான முறையில் சாவு
|மலேசியாவிற்கு வேலைக்கு சென்ற படவேட்டை சேர்ந்த என்ஜினீயர் மர்மமான முறையில் இறந்துள்ளார். அது குறித்து விசாரித்து உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கலெக்டரிடம் குடும்பத்தினர் மனு அளித்தனர்.
என்ஜினீயர் சாவில் மர்மம்
போளூர் தாலுகா படவேடு மதுரா ராமநாதபுரம் கிராமத்தை சேர்ந்தவர் தேசிங்கு (வயது 60). இவர் நேற்று அவரது குடும்பத்தினருடன் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார். அங்கு கலெக்டர் முருகேஷை சந்தித்து கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:-
என்னுடைய மகன் சம்பத்குமார் (37), பி.இ. பொறியியல் பட்டதாரி. அவனுக்கு திருமணமாகி ரேணுகா (32) என்ற மனைவியும், ஸ்ருத்திகா (7), யாஷிகா (2) என்ற மகள்களும், வேதாந்த் (4) என்ற மகனும் உள்ளனர்.
விவசாயத்தில் போதிய வருமானம் இல்லாததால் மிகவும் வறுமை நிலை ஏற்பட்டது. அதனால் வேலை தேடி கடந்த 2022-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 30-ந் தேதி திருச்சியில் இருந்து விமானம் மூலம் மலேசியா சென்றான். மலேசியாவில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் கடந்த 11 மாதங்களாக சம்பத்குமார் வேலை செய்து வந்தான்.
தினமும் எங்களுக்கு போனில் பேசுவான். கடந்த 28-ந் தேதி இரவு 8.30 மணிக்கு நல்ல முறையில் சம்பத்குமார் எங்களிடம் பேசினான். மறுநாள் காலை சுமார் 8 மணியளவில் சம்பத்குமார் மலேசியாவில் இறந்து விட்டார் என்று மலேசியாவில் இருந்து பேசியவர்கள் போனில் தெரிவித்ததாக சந்தவாசல் கிராமத்தைச் சேர்ந்த சுதாகர் என்பவர் என்னிடம் தெரிவித்தார். என்னுடைய மகன் சம்பத்குமார் மலேசியாவில் மர்மமான முறையில் இறந்துள்ளார்.
எந்த விவரமும் எங்களுக்கு தெரியவில்லை.எனவே தயவு கூர்ந்து என்னுடைய மகன் உடலை மலேசியா நாட்டில் இருந்து பெற்றுத் தருமாறு கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
அமைச்சரிடம் மனு
இதனிடையே சம்பத்குமார் மனைவி ரேணுகா வெளிநாட்டுவாழ் தமிழர் நல அமைச்சர் செஞ்சி மஸ்தானை விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் சந்தித்து மனு அளித்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
எனது கணவர் சம்பத்குமார் மலேசியாவில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். அவர் மாரடைப்பால் இறந்து விட்டதாக கூறுகிறார்கள். அவர் இறப்பில் சந்தேகம் உள்ளது. எனவே அது குறித்து விசாரித்து உடலை எங்கள் ஊருக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தார்.
மனுவைப் பெற்ற அமைச்சர் செஞ்சிமஸ்தான், இது குறித்து முறைப்படி இந்திய அரசின் வெளிநாட்டுத்துறை மூலம், மலேசியா நாட்டு தூதரகத்தை தொடர்பு கொண்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததாக சம்பத்குமாரின் குடும்பத்தினர் தெரிவித்தனர்.