சென்னை
மடிப்பாக்கத்தில் சாலையை கடந்து செல்ல முயன்ற என்ஜினீயர் மின்சாரம் தாக்கி பலி - மின்வயரை மிதித்தபோது பரிதாபம்
|மடிப்பாக்கத்தில் சாலையை கடந்து செல்ல முயன்ற என்ஜினீயர் மின்வயரை மிதித்தபோது மின்சாரம் தாக்கி பலியானார்.
சென்னையை அடுத்த பள்ளிக்கரணை விவேகானந்தர் தெருவைச் சேர்ந்தவர் இளவரசன் (வயது 33). கம்ப்யூட்டர் என்ஜினீயரான இவரது சொந்த ஊர் ராமநாதபுரம் மாவட்டம் ஆகும். இவர், நேற்று முன்தினம் நள்ளிரவு தனது நண்பர்களுடன் கையேந்தி பவனில் சாப்பிடுவதற்காக மடிப்பாக்கம் கைவேலி சந்திப்பு சிக்னல் அருகே சாலையை கடந்து செல்ல முயன்றார்.
அந்த சாலையின் நடுவே உள்ள தடுப்பு சுவர்களுக்கு மத்தியில் மின்சார கம்பம் அமைக்கப்பட்டு இருந்தது. அதில் உள்ள சிறியஇடைவெளி வழியாக இளவரசன் சாலையை கடந்து ெசல்ல முயன்றார்.
அப்ேபாது அந்த மின்கம்பத்துக்கு செல்லும் மின்சார வயர் முறையான பாதுகாப்பு இன்றி வெளியே தெரியும்படி இருந்தது. இதனை கவனிக்காமல் இளவரசன், மின்சார வயரை மிதித்து விட்டார். இதில் மின்சாரம் தாக்கியதில் தூக்கி வீசப்பட்ட அவரை, அவரது நண்பர் அலெக்சாண்டர் மீட்டு அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்றார்.
அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், வரும் வழியிலேயே இளவரசன் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இது பற்றி மடிப்பாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
சாலையின் நடுவில் உள்ள மின்கம்பங்கள் உரிய முறையில் பராமரிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.