சென்னை
ராமாபுரம் அருகே மோட்டார் சைக்கிள் மீது கிரேன் மோதி என்ஜினீயர் பலி
|மோட்டார்சைக்கிள் மீது கிரேன் மோதி என்ஜினீயர் பரிதாபமாக இறந்தார்.
சென்னை போரூர், சக்தி நகரை சேர்ந்தவர் தீபக் (வயது 37). சாப்ட்வேர் என்ஜினீயரான இவர், ராமாபுரத்தில் உள்ள தனியார் சாப்ட்வேர் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் இரவு வேலை முடிந்து மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார்.
மவுண்ட் - பூந்தமல்லி சாலையில் ராமாபுரம் அருகே சென்றபோது பின்னால் வேகமாக வந்த கிரேன், இவரது மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் நிலை தடுமாறி கீழே விழுந்ததில் தலையில் பலத்த காயம் அடைந்த தீபக், ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து பாண்டிபஜார் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து கிரேன் டிரைவர் தினேஷ் (30) என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
பூந்தமல்லி அடுத்த காட்டுப்பாக்கம், கோபுரசநல்லூர் பகுதியை சேர்ந்தவர் கணேசன் (53). சொந்தமாக கலவை எந்திரம் வைத்து தொழில் செய்து வந்தார். இவர், நேற்று தனது நண்பர் சங்கர்(54) என்பவருடன் குன்றத்தூர் செம்பரம்பாக்கம் ஏரிக்கரை பகுதியில் உள்ள மீன் கடைக்கு சென்று மீன் வாங்கிவிட்டு மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார்.
குன்றத்தூர் பஜார் பகுதியில் வந்தபோது எதிரே பழம் இறக்க வந்த சரக்கு ஆட்டோ இவர்களது மோட்டார் சைக்கிள் மீது உரசியது. இதில் நிலைதடுமாறி இருவரும் கீழே விழுந்தனர். அப்போது பின்னால் வந்த லாரி கணேசன் மீது ஏறி இறங்கியது. லாரி சக்கரத்தில் சிக்கிய கணேசன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
அவரது நண்பர் காயம் ஏதும் இன்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இது குறித்து குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆட்டோ டிரைவர் மற்றும் லாரி டிரைவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.