சென்னை
தண்டையார்பேட்டையில் மாடியில் இருந்து குதித்து என்ஜினீயர் தற்கொலை
|தண்டையார்பேட்டையில் வீட்டின் மாடியில் இருந்து குதித்து மெக்கானிக்கல் என்ஜினீயர் தற்கொலை செய்து கொண்டார்.
மெக்கானிக்கல் என்ஜினீயர்
சென்னை தண்டையார்பேட்டை ஆர்.டி.ஓ. அலுவலகம் அருகே வசித்து வருபவர் அன்பு. மிக்சர் வியாபாரி. இவருடைய மகன் சுதர்சன் (வயது 26). என்ஜினியரீங் மெக்கானிக் பட்டதாரியான இவர், கடந்த 3 ஆண்டுகளாக அம்பத்தூர் ஒரகடம் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் டிசைனிங் என்ஜினீயராக பணிபுரிந்து வந்தார். இவர் கடந்த சில நாட்களாக வீட்டில் இருந்த படி பணிபுரிந்து வந்த நிலையில், விடுமுறை தினமான நேற்று முன்தினம் சலூன் கடைக்கு சென்று முடிவெட்டி விட்டு வந்ததையடுத்து செல்போனை வைத்துவிட்டு வீட்டிலிருந்து சென்றவர் வீடு திரும்பவில்லை என கூறப்படுகிறது.
ரத்தவெள்ளத்தில்...
நீண்ட நேரமாகியும் மகனை காணாததால் பதறிய பெற்றோர்கள் உறவினர் வீடுகள் உள்பட பட இடங்களில் தேடினர். எங்கு தேடியும் கிடைக்காததால் வீட்டிற்கு திரும்பி வந்த பெற்றோர் சுதர்சனின் செருப்பு வீட்டில் கிடந்ததைப் பார்த்து மொட்டை மாடியில் சென்று தேடினர். பின்னர் அங்கு சென்று பார்த்த போது, வீட்டின் பின்புறம் உள்ள ஆர்.டி.ஓ.அலுவலகம் முன்புறம் வளாகத்தில் ரத்த வெள்ளத்தில் சுதர்சன் கிடப்பதை பார்த்த பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அவரை மீட்டு, அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.
தற்கொலை
அங்கு அவரது உடலை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் புதுவண்ணாரப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் வானமாமலை சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சுதர்சனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், சுதர்சன் தனது வீட்டின் மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
இந்த சம்பவம் குறித்து புதுவண்ணாரப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து சுதர்சன் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மற்றொரு சம்பவம்
வளசரவாக்கம், பழனியப்பாநகர் பகுதியை சேர்ந்தவர் ராமகிருஷ்ணராவ் (53), சினிமா துறையில் ஒளிப்பதிவாளராக பணிபுரிந்து வருகிறார். இவரது மகள் அரிதா ராஜேஸ்வரி (25). பட்டப்படிப்பு முடித்த இவர் நேற்று முன்தினம் இரவு தனது அறைக்குள் சென்று தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து வளசரவாக்கம் இன்ஸ்பெக்டர் ஆபிரகாம் குரூஸ் தலைமையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.