< Back
மாநில செய்திகள்
என்ஜினீயர் கழுத்தை அறுத்து கொடூர கொலை
புதுக்கோட்டை
மாநில செய்திகள்

என்ஜினீயர் கழுத்தை அறுத்து கொடூர கொலை

தினத்தந்தி
|
11 July 2023 11:14 PM IST

புதுக்கோட்டையில் பட்டப்பகலில் என்ஜினீயர் கழுத்தை அறுத்து கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

என்ஜினீயர் கொலை

புதுக்கோட்டை நரிமேடு பகுதியை சேர்ந்தவர் விஜயராகவன் (வயது 47). என்ஜினீயரான இவர், சென்னையில் வேலை பார்த்து வந்தார். பின்னர் அவர் அங்கு வேலையை விட்டு வீட்டிற்கு வந்து விட்டார். இவருக்கு இரண்டு மனைவிகள். இந்நிலையில், 2 மனைவிகளையும் பிரிந்து வீட்டில் இவர் மட்டும் தனியாக வசித்து வந்தார். இவர் தினமும் மதுகுடிக்கும் பழக்கம் உள்ளதால் இன்று மது அருந்தி உள்ளார். இன்று மதியம் அவரது வீட்டின் அருேக கழுத்து மற்றும் வயிற்று பகுதிகளில் அறுக்கப்பட்டு கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

இந்நிலையில் அந்த வழியாக சென்றவர்கள் கொலை செய்யப்பட்ட நிலையில் கிடந்த விஜயராகவன் உடலை பார்த்து திருக்கோகர்ணம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

போலீசார் விசாரணை

அதன் பேரில், திருக்கோகர்ணம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விஜயராகவன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். முன்னதாக கைரேகை நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டு கைரேகைகளை பதிவு செய்தனர். மேலும் மோப்பநாய் அழைத்து வரப்பட்டது. அந்த மோப்ப நாய் சிறிது தூரம் ஓடி சென்று நின்று விட்டது. அது யாரையும் கவ்வி பிடிக்கவில்லை.

இதையடுத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வந்திதா பாண்டே சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினார். இதுகுறித்து திருக்கோகர்ணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விஜயராகவன் முன்விரோதத்தில் கொலை செய்யப்பட்டாரா? அல்லது குடும்ப பிரச்சினையில் யாரும் கொலை செய்தனரா? என்பது உள்பட பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்