ககன்யான் புரோ மாடல் என்ஜின் சோதனை வெற்றி - இஸ்ரோ விஞ்ஞானிகள் தகவல்
|ககன்யான் திட்டத்தின் புரோ மாடல் என்ஜின் சோதனை வெற்றிபெற்றதாக இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.
பணகுடி,
நெல்லை மாவட்டம் காவல்கிணறு மகேந்திரகிரி இஸ்ரோ மையத்தில், விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் வகையில் 'ககன்யான்' திட்டத்துக்கு தேவையான ராக்கெட் என்ஜின் பரிசோதனை பல்வேறு கட்டங்களாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் மனிதர்களை விண்ணுக்கும் அனுப்பும் திட்டமான ககன்யான் திட்டத்தின் புரோ மாடல் இன்ஜின் சோதனை வெற்றி பெற்றுள்ளதாக இஸ்ரோ விஞ்ஞானிகள் தகவல் தெரிவித்துள்ளனர். மொத்தமாக 270 விநாடிகள் மேற்கொள்ளப்பட்ட சோதனை வெற்றி பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சோதனை மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. மேலும் இது இந்திய விண்வெளித் துறையின் முக்கிய மைல்கல்லாக கருதப்படுகிறது.
முன்னதாக இந்த திட்டத்தின் கீழ் மூன்று பேர் விண்வெளிக்கு அனுப்பப்பட உள்ளனர். பூமியில் இருந்து, 400 கி.மீ தொலைவில் மூன்று நாட்கள் விண்வெளியில் இவர்கள் ஆய்வு செய்வர். பின்னர் மீண்டும் பூமிக்கு அழைத்துவரப்படுவர். இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்கான சோதனைகளில் இஸ்ரோ ஈடுபட்டுள்ளது.