புதுக்கோட்டை
அமலாக்கத்துறையினர் 2-வது நாளாக சோதனை
|புதுக்கோட்டையில் மணல் குவாரி ஒப்பந்ததாரர் ராமச்சந்திரன் வீடு, அலுவலகத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் 2-வது நாளாக சோதனை நடத்தினர்.
2-வது நாளாக சோதனை
மணல் குவாரிகளில் சட்டவிரோத செயல்பாடுகளின் புகார் காரணமாக மணல் குவாரி ஒப்பந்ததாரர்கள் வீடு, அலுவலகங்கள் மற்றும் அவர்கள் தொடர்புடைய இடங்கள் என தமிழகத்தில் பல இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று முன்தினம் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.
அந்த வகையில் புதுக்கோட்டையில் பிரபல தொழில் அதிபரும், மணல் குவாரி ஒப்பந்ததாரருமான முத்துப்பட்டினத்தை சேர்ந்த ராமச்சந்திரனின் வீடு, அலுவலகம் மற்றும் அவரது தொடர்புடையவர்களின் இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று முன்தினம் சோதனை மேற்கொண்டனர். இதில் கந்தர்வகோட்டை அருகே புனல்குளம் பகுதியில் சண்முகம் என்பவரது கிராவல் குவாரி, புதுக்கோட்டையில் தனியார் கட்டுமான நிறுவனம் ஆகிய இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நேற்று முன்தினத்துடன் முடிவடைந்தது.
மற்ற இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நேற்று 2-வது நாளாக தொடர்ந்தது. இதில் புதுக்கோட்டையில் நிஜாம் காலனியில் உள்ள ராமச்சந்திரனின் அலுவலகம், முத்துப்பட்டினத்தில் உள்ள அவரது வீடு, ஆடிட்டர் முருகேசன் என்பவரது அலுவலகம், அவருக்கு நெருக்கமானவரான நிஜாம் காலனியில் உள்ள தொழில்அதிபர் மணிவண்ணனின் வீடு, வம்பன் அருகே மழவராயன்பட்டியில் ராமச்சந்திரன் உறவினர் வீரப்பன் வீடு ஆகிய இடங்களில் இந்த சோதனை நேற்று 2-வது நாளாக நீடித்தது.
கணினி பழுது
இந்த சோதனையின் போது வெளிநபர்கள் யாரையும் உள்ளே அனுமதிக்கவில்லை. அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்திய போது வெளியே பாதுகாப்பு பணியில் மத்திய தொழில் துப்பாக்கி ஏந்திய படி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதற்கிடையில் மணிவண்ணன் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நேற்று மதியம் முடிவடைந்தது. அதிகாரிகள் ஒரு பையில் ஆவணங்களை எடுத்துக்கொண்டு காரில் ஏறி புறப்பட்டு சென்றனர். புதுக்கோட்டை நிஜாம் காலனியில் ராமச்சந்திரனின் அலுவலகத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்திய போது அலுவலகத்தில் இருந்த கணினி ஒன்று பழுதானதாக கூறப்படுகிறது. இதனால் கணினி என்ஜினீயர் வரவழைக்கப்பட்டு கணினியில் பழுது சரி செய்யப்பட்டன. அதன்பின் அதிகாரிகள் அதில் விவரங்களை பார்வையிட்டனர்.
ஆவணங்கள்
அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நேற்று 2-வது நாளாக நீடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. சோதனையில் கிடைத்த ஆவணங்கள் மற்றும் அவர்களுக்கு ஏற்கனவே கிடைத்த ஆவணங்கள் தொடர்பாக ராமச்சந்திரனிடம் விசாரணை நடத்த அமலாக்கத்துறை அதிகாரிகள் முடிவு செய்ததாக கூறப்படுகிறது. அவரது செல்போன் எண் அனைத்து வைக்கப்பட்டிருந்ததால், அவரை அதிகாரிகள் தொடர்பு கொள்ள முடியாமல் தவித்துள்ளனர். அவர் வராமல் இருந்தாலும் தங்களது சோதனையை அதிகாரிகள் தொடர்ந்து மேற்கொண்டனர்.
கறம்பக்குடி
கறம்பக்குடி அருகே உள்ள குளந்திரான்பட்டியில் திண்டுக்கல் தொழிலதிபர் ரெத்தினத்தின் உறவினரும், மணல் குவாரி அதிபருமான கரிகாலன் வீட்டில் சோதனை நடைபெற்றது. அதிகாலை 5 மணிக்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் 5 பேர் துப்பாக்கி ஏந்திய மத்திய பாதுகாப்பு படையினர் பாதுகாப்புடன் கரிகாலன் வீட்டிற்குள் சென்றனர். அப்போது தொழிலதிபர் கரிகாலன் அவரது சகோதரர் கருப்பையா இருவரும் வீட்டில் இல்லை என கூறப்படுகிறது. வீட்டில் இருந்தவர்களிடம் விசாரணை நடத்திய அதிகாரிகள் அங்கிருந்த ஆவணங்களை ஆய்வு செய்தனர். பின்னர் ஆய்வை முடித்து கொண்டு மாலை 4 மணிக்கு காரில் புறப்பட்டு சென்றனர்.
இதற்கிடையில் புதுக்கோட்டை நகர் மன்ற வளாகத்தில் உள்ள அரசு ஒப்பந்ததாரர் கர்ணன் அலுவலகத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று மாலை அதிரடி சோதனை நடத்தினர்.
இரவிலும் நீடித்த சோதனை
புதுக்கோட்டை நிஜாம் காலனியில் ராமச்சந்திரன் அலுவலகம் அவருக்கு சொந்தமான அடுக்குமாடி குடியிருப்பில் தரைதளத்தில் இயங்கி வருகிறது. இந்த அலுவலகத்தில் சோதனை நடைபெற்று வந்த நிலையில் அடுக்குமாடி குடியிருப்பில் 2-வது தளத்தில் ஒரு வீட்டில் வைக்கப்பட்டிருந்த அவரது அலுவலகம் சார்ந்த ஆவணங்களை அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். வெவ்வேறு இடங்களில் சோதனையை முடித்த பின்பு அமலாக்கத்துறை அதிகாரிகள் சிலர் நிஜாம் காலனியில் சோதனை நடைபெற்ற இடத்திற்கு வந்தனர். அவர்களும் 2-வது தளத்தில் உள்ள அறைகளில் சோதனையில் ஈடுபட்டனர். இதற்கிடையே வம்பன் அருகே வீரடிப்பட்டியில் ஒருவர் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்த சென்றனர். மழவராயன்பட்டியில் வீரப்பன் வீட்டில் நடைபெற்ற சோதனை நேற்று இரவு நிறைவுபெற்றது. மற்ற இடங்களில் சோதனை இரவிலும் நீடித்தது. இந்த சோதனையின் போது கைப்பற்றப்படவை குறித்து அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிகாரபூர்வமாக எதுவும் தெரிவிக்கவில்லை. என்பது குறிப்பிடத்தக்கது.