< Back
மாநில செய்திகள்
கரூர்
மாநில செய்திகள்

கரூரில் 2 மணல் குவாரிகளில் அமலாக்கத்துறையினர் சோதனை

தினத்தந்தி
|
11 Oct 2023 1:13 AM IST

கரூரில் 2 மணல் குவாரிகளில் அமலாக்கத்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர்.

மணல் குவாரி

மணல் குவாரிகளில் அதிகளவில் வரி ஏய்ப்பு நடந்துள்ளதாக எழுந்த புகாரையடுத்து சென்னை, திண்டுக்கல், புதுக்கோட்டை, திருச்சியில் மணல் குவாரி தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் கடந்த மாதம் 12-ந்தேதி சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனையானது தொடர்ந்து 3 நாட்கள் நடைபெற்றது. இந்த சோதனையின் போது அமலாக்கத்துறையினர் முக்கிய ஆவணங்களை கைப்பற்றியதாக கூறப்படுகிறது.

அமலாக்கத்துறையின் இந்த சோதனையின் காரணமாக கரூர் அருகே உள்ள வாங்கல் அடுத்துள்ள மல்லம்பாளையம் பகுதியில் செயல்பட்டு வந்த மணல் குவாரி செயல்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டது. இதனால் மல்லம்பாளையம் மணல்குவாரி வெறிச்சோடி கிடந்தது. மேலும் நுழைவுவாயில் பகுதியில் வாகனங்கள் செல்லமுடியாதபடி பேரிகார்டு அமைக்கப்பட்டிருந்தன. மேலும் மணல் குவாரிக்கு வாகனங்கள் செல்லும் தற்காலிக சாலையில் பொக்லைன் எந்திரம் மூலம் பள்ளம் தோண்டப்பட்டிருந்தது. மணல் குவாரி செயல்படாததால் மணல் சேமிப்பு கிடங்கில் லாரிகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.

அமலாக்கத்துறையினர் சோதனை

கரூர் காவிரி ஆற்றில் நன்னியூர்புதூர் மற்றும் மல்லம்பாளையம் ஆகிய பகுதிகளில் மணல் குவாரிகள் செயல்பட்டு வந்தது. அமலாக்கத்துறையின் சோதனையின் காரணமாக மணல்குவாரிகள் மூடப்பட்டன. இந்தநிலையில் நன்னியூர் மற்றும் மல்லம்பாளையம் ஆகிய 2 இடங்களிலும் உள்ள மணல் குவாரிகளில் அமலாக்கத்துறையினர் நேற்று காலை 10 மணியளவில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது 4 கார்கள் மற்றும் 1 டெம்போ வேன் உள்ளிட்ட வாகனங்களில் 15-க்கும் மேற்பட்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் வந்தனர். தொடர்ந்து அளவீட்டு கருவிகளுடன் காவிரி ஆற்றில் இறங்கி மணல் குவாரிகளில் சோதனையில் ஈடுபட்டனர். மேலும், துப்பாக்கி ஏந்திய மத்திய பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

கணக்கிடும் பணி

அப்போது நன்னியூர்புதூர் பகுதியில் செயல்பட்டு வந்த காவிரி ஆற்றின் மணல் குவாரியில் விதிமுறைகளை மீறி அளவுக்கு அதிகமாக மணல் அள்ளப்பட்டுள்ளதா? மணல் குவாரிகளில் எவ்வளவு மணல் அள்ளப்பட்டுள்ளது? என்பது குறித்து அதிகாரிகள் கணக்கிடும் பணியில் ஈடுபட்டனர். இதையடுத்து, மணல் குவாரி சோதனையை மாலை 4 மணியளவில் அமலாக்கத் துறையினர் முடித்துக்கொண்டு அங்கிருந்து கிளம்பி சென்றனர். கரூரில் 2 மணல் குவாரிகளில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்திய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்