திருச்சி
மணல் குவாரியில் அளவிடும் பணியில் ஈடுபட்ட அமலாக்கத்துறையினர்
|மணல் குவாரியில் அளவிடும் பணியில் அமலாக்கத்துறையினர் ஈடுபட்டனர்.
கொள்ளிடம் டோல்கேட்:
தமிழகத்தில் செயல்படும் மணல் குவாரிகளில் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகப்படியான மணல் அள்ளப்படுவதாக எழுந்த குற்றச்சாட்டுகளின்பேரில் கடந்த மாதம் 12-ந் தேதி தமிழகத்தில் உள்ள பல்வேறு மணல் குவாரிகளில் அமலாக்கத்துறையினர் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். இதன் தொடர்ச்சியாக திருச்சி மாவட்டம், தாளக்குடி அருகே கொள்ளிடம் ஆற்றில் உள்ள மணல் குவாரியில் சி.ஆர்.பி.எப். வீரர்கள் பாதுகாப்புடன் அமலாக்கத்துறையினர் நள்ளிரவு வரை சோதனை நடத்திவிட்டு சென்றனர். இதனைத்தொடர்ந்து கடந்த 17-ந் தேதி திடீரென தாளக்குடி மணல் குவாரியில் அமலாக்கத்துறை அதிகாரிகள், பொதுப்பணித்துறை அதிகாரிகளுடன் அனுமதிக்கப்பட்ட அளவிற்கு மணல் அள்ளப்பட்டுள்ளதா? என்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
இந்நிலையில் தாளக்குடி மணல் குவாரியில் நேற்று அமலாக்கத்துறையினர் அனுமதிக்கப்பட்ட அளவிற்கு மணல் அள்ளப்பட்டுள்ளதா? என்று அளவீடு செய்யும் பணியில் ஈடுபட்டனர். இந்த பணியில் 5 சி.ஆர்.பி.எப். வீரர்கள் பாதுகாப்புடன் அமலாக்கத்துறையினர் 12 பேர் மற்றும் 5 அளவீடு பணியாளர்கள் என 17 பேர் மணல் குவாரிக்குள் மணல் அள்ளப்பட்டுள்ள பகுதியில் அளவீடு கருவிகளை கொண்டு, அளவீடு செய்யும் பணியில் ஈடுபட்டனர். மாலை 4 மணிக்கு தொடங்கிய இந்த பணியானது 6 மணி வரை நடைபெற்றது. அமலாக்கத்துறையினரின் தொடர் சோதனை மற்றும் ஆய்வினால் மணல் குவாரி ஒப்பந்ததாரர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வாய்ப்புள்ளதாக பரபரப்பு ஏற்பட்டுள்ளது.