அமலாக்கத்துறை அதிகாரி வழக்கை சிபிஐ-க்கு மாற்ற இயலாது: ஐகோர்ட்டு மதுரை கிளை
|அமலாக்கத்துறை அதிகாரி கைதுசெய்யப்பட்ட வழக்கை சிபிஐ-க்கு மாற்றக்கோரி ஐகோர்ட்டு மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது.
திண்டுக்கல்,
திண்டுக்கல்லில் அரசு மருத்துவரிடம் லஞ்சம் பெற்ற வழக்கில் கைது செய்யப்பட்ட அமலாக்கத் துறை அதிகாரி அன்கித் திவாரி, கடந்த 1 ஆம் தேதி இரவு 10 மணிக்கு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, திண்டுக்கல் மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டார்.
தற்போது அன்கித் திவாரி, நீதிமன்ற உத்தரவின்படி லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரின் காவலில் உள்ளார். இதற்கிடையில், அமலாக்கத்துறை அதிகாரி கைதுசெய்யப்பட்ட வழக்கை சிபிஐ-க்கு மாற்றக்கோரி ஐகோர்ட்டு மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கின் விசாரணை இன்று நடைபெற்றது. அப்போது, தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் வாதிடுகையில், லஞ்ச ஒழிப்புத்துறை என்பது மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு அமைப்பாகும். மத்திய, மாநில அரசு ஊழியர்கள் லஞ்ச முறைகேடுகளில் ஈடுபடும்போது, அவர்களை கைதுசெய்யும் அதிகாரம் லஞ்ச ஒழிப்புத்துறைக்கு உள்ளது என தெரிவித்தார்.
அப்போது பேசிய நீதிபதிகள், மத்திய அரசு அதிகாரிகள் தவறுசெய்யும் போது பிடிபட்டால், மாநில அரசின் லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை செய்யக்கூடாது என்ற கருத்து ஏற்கத்தக்கது அல்ல என்றும், இந்த விவகாரம் தொடர்பாக ஐகோர்ட்டு மற்றும் சுப்ரீம் கோர்ட்டு ஏற்கெனவே தீர்ப்புகளை வழங்கியுள்ளது என்றும் தெரிவித்தனர்.
இதனால், லஞ்ச ஒழிப்புத்துறையின் அதிகாரத்தை மீண்டும் இந்த நீதிமன்றத்தில் நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை என்று கூறி வழக்கை தள்ளுபடி செய்தனர்.