கரூர்
அமலாக்கத்துறை சோதனை: கரூரில் மணல் குவாரி பணிகள் நிறுத்தம்
|அமலாக்கத்துறை சோதனையால் கரூரில் மணல் குவாரி பணிகள் நிறுத்தப்பட்டன.
தமிழகத்தில் மணல் குவாரிகளில் அதிகளவில் வரி ஏய்ப்பு நடந்துள்ளதாக எழுந்த புகாரை தொடர்ந்து புதுக்கோட்டை, திண்டுக்கல், சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். மேலும், மணல் குவாரிகளின் ஒப்பந்ததாரர்களின் வீடு, அலுவலகங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தநிலையில் கரூர் அருகே உள்ள வாங்கல் அடுத்துள்ள மல்லம்பாளையம் பகுதியில் மணல் குவாரி செயல்பட்டு வருகிறது.
அமலாக்கத்துறை அதிகாரிகளின் சோதனை காரணமாக, மல்லம்பாளையம் மணல் குவாரி நேற்று செயல்படவில்லை. இதனால் மல்லம்பாளையம் மணல் குவாரி வெறிச்சோடி கிடந்தது. மேலும் நுழைவு வாயில் பகுதியில் வாகனங்கள் செல்ல முடியாதபடி பேரிகார்டு அமைக்கப்பட்டிருந்தது. மணல் குவாரிக்கு வாகனங்கள் செல்லும் தற்காலிக சாலையில் பொக்லைன் எந்திரம் மூலம் பள்ளம் தோண்டப்பட்டிருந்தது. மணல் குவாரி செயல்படாததால் மணல் லாரிகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.