< Back
மாநில செய்திகள்
அமலாக்கத்துறையை அரசியல் பழிவாங்கலுக்காக பயன்படுத்தவில்லை - மத்திய மந்திரி அனுராக் தாக்குர்
மாநில செய்திகள்

அமலாக்கத்துறையை அரசியல் பழிவாங்கலுக்காக பயன்படுத்தவில்லை - மத்திய மந்திரி அனுராக் தாக்குர்

தினத்தந்தி
|
12 Aug 2023 11:45 PM IST

அமலாக்கத்துறையை அரசியல் பழிவாங்கலுக்காக பயன்படுத்தவில்லை என்று மத்திய மந்திரி அனுராக் தாக்குர் தெரிவித்துள்ளார்.

புதிய மசோதாக்கள்

மத்திய தகவல் ஒலிபரப்பு, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை மந்திரி அனுராக் தாக்குர் சென்னையில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

மத்திய அரசு அனைத்து மாநிலங்களின் நலன்களிலும் அக்கறை கொண்டுள்ளது. அதில், தமிழகமும் முக்கியமான மாநிலம். பிரதமர் மோடி பல்வேறு நாடுகளுக்கு செல்லும்போது அங்கு நடைபெறும் நிகழ்ச்சிகளில் தொன்மை வாய்ந்த தமிழ் புலவர்களின் பாடல்கள், குறள்களை மேற்கோள்காட்டி வருகிறார். இது தமிழகத்தின் மீது அவருக்கு இருக்கும் மிகைப்படியான அன்பை காட்டுகிறது.

இந்திய குற்றவியல் சட்டங்களை மறுசீரமைத்து நாடாளுமன்றத்தில் 3 புதிய மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த 3 புதிய மசோதாக்கள் நிலைக்குழுவின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டிருக்கிறது. உறுப்பினர்கள் தங்களது கருத்துகளை தெரிவிக்கலாம். அதன் பின்னர்தான் நாடாளுமன்றத்துக்கு ஒப்புதலுக்காக வரும்.

வேதனை

மொழியின் பெயரால் மக்களை பிளவுப்படுத்துவதை விட்டுவிட்டு, மக்களுக்கு நீதியை விரைவாக வழங்குவதை தான் பார்க்கவேண்டும். புதிய மசோதாக்கள் ஒப்புதல் பெற்று சட்டமாக்கப்படும்போது, 3 மாதத்துக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு, 3 வருடத்துக்குள் நீதி கிடைக்கும். இது மக்களுக்கான சட்டம்.

இந்திய குற்றவியல் சட்டங்கள் மறுசீரமைப்பு மசோதாக்கள் பற்றி முழுமையாக தெரிந்து கொள்ளாமல் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டிருப்பது வேதனையாக உள்ளது.

காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் மணிப்பூர் குண்டுவெடிப்பு, முழு அடைப்புக்கு மட்டுமே பெயர் பெற்றதாக இருந்தது. மணிப்பூர் வன்முறை காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் இருந்துதான் தொடங்கியது. மணிப்பூரில் அமைதியை கொண்டு வருவதற்கான முயற்சிகள் நடக்கிறது. ஆனால் அதனை எதிர்க்கட்சிகள் சில்லரை அரசியல் செய்து சிதைக்கிறார்கள்.

கச்சத்தீவை காங்கிரஸ் தான் இலங்கைக்கு தாரைவார்த்தது. ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் அங்கம் வகித்தபோது, தி.மு.க. அதைப்பற்றி எதையும் பேசவில்லை. மணிப்பூர் விவகாரத்தில் குற்றம் செய்தவர்களை சும்மா விடமாட்டோம். ராகுல்காந்திக்கு மணிப்பூரில் அமைதி நிலவுவதை விட குடும்பம், அரசியல், அதிகாரம் தான் முக்கியம். ஆனால் எங்களுக்கு அங்கு அமைதியை ஏற்படுத்துவது தான் முக்கியம்.

அரசியல் பழிவாங்கலுக்காக...

வருகிற நாடாளுமன்ற தேர்தலில் கடந்த முறை பிடித்த இடத்தை விடவும் அதிக இடங்களில் வெற்றி பெறுவோம். தமிழகத்திலும் அதிக இடங்களை பிடிப்போம். தமிழகத்தில் கூட்டணி கட்சியான அ.தி.மு.க.விடம் அதிக இடங்களை கேட்டு பெறுவோம். ஏராளமான முறைகேடுகள், ஊழல் செய்த ஐக்கிய முற்போக்கு கூட்டணியால் வருகிற தேர்தலில் வெற்றி பெறமுடியாது.

அமலாக்கத்துறையை அரசியல் பழிவாங்கலுக்காக பயன்படுத்தவில்லை. தவறு செய்யாதவர்கள் பயப்படவேண்டியதின் அவசியம் என்ன? தவறு செய்தால் அமலாக்கத்துறை அதனுடைய வரைமுறைக்கு உட்பட்டு, தனது பணியை செய்யும். இந்தியாவில் 2036-ல் ஒலிம்பிக் போட்டியை நடத்த வேண்டும் என்பது எங்களது நோக்கம்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்