< Back
மாநில செய்திகள்
அமைச்சர் பொன்முடி மீண்டும் இன்று மாலை 4 மணிக்கு ஆஜராகுமாறு அமலாக்கத்துறை சம்மன்..!
மாநில செய்திகள்

அமைச்சர் பொன்முடி மீண்டும் இன்று மாலை 4 மணிக்கு ஆஜராகுமாறு அமலாக்கத்துறை சம்மன்..!

தினத்தந்தி
|
18 July 2023 3:59 AM IST

அமைச்சர் பொன்முடி மீண்டும் இன்று மாலை 4 மணிக்கு ஆஜராகுமாறு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி உள்ளதாக வழக்கறிஞர் சரவணன் தெரிவித்தார்.

சென்னை,

காலை முதல் மாலை வரை 13 மணி நேர விசாரணைக்கு பிறகு அமைச்சர் பொன்முடியை சென்னை சாஸ்திரிபவனில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்துக்கு அழைத்துச் செல்ல அதிகாரிகள் முடிவு செய்தனர். அதைத்தொடர்ந்து பொன்முடியை அவரது காரிலேயே அமலாக்கத்துறை அலுவலகத்துக்கு அழைத்து சென்றனர். அங்கு தனி அறையில் அவரிடம் விசாரணை நடைபெற்றது.

அவரது வீட்டில் இருந்து ஆவணங்கள் மற்றும் வெளிநாட்டு கார் ஆகியவற்றையும் அதிகாரிகள் தங்கள் அலுவலகத்துக்கு கொண்டு சென்றனர். இரவு 8 மணி முதல் அமலாக்கத்துறை அலுவலகத்தில் அமைச்சர் பொன்முடியிடம் விசாரணை நடைபெற்றது. நேற்று இரவு 8 மணிமுதல் நடைபெற்று வந்த விசாரணை இன்று நள்ளிரவு 3 மணியளவில் நிறைவடைந்தது.

தொடர்ந்து அமைச்சர் பொன்முடியின் விழுப்புரம் சென்னை இல்லங்களில் அமலாக்கத்துறை நடத்திய சோதனைகள் நிறைவடைந்தன. இதன்படி நேற்று காலை 7 மணி முதல் நடைபெற்ற சோதனை 19 மணி நேரத்திற்கு பிறகு நிறைவடைந்தது. நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் விசாரணை நிறைவடைந்தநிலையில் அமைச்சர் பொன்முடி அங்கிருந்து தனது வீட்டிற்கு புறப்பட்டு சென்றார்.

இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமலாக்கத்துறை துணை இயக்குநர் கார்த்திக், "அமைச்சர் பொன்முடி மீது கைது நடவடிக்கை இல்லை" என்று அவர் கூறினார்.

மீண்டும் இன்று மாலை 4 மணிக்கு ஆஜர்

அமைச்சர் பொன்முடியிடம் அமலாக்கத்துறை விசாரணை நிறைவடைந்தநிலையில், அவரது வழக்கறிஞர் சரவணன் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியபோது, "அமைச்சர் பொன்முடி மீண்டும் இன்று மாலை 4 மணிக்கு ஆஜராகுமாறு அமலாக்கத்துறை சம்மன் அளித்துள்ளது. சுப்ரீம்கோர்ட்டு எச்சரிக்கையை மீறி பொன்முடிக்கு மன உளைச்சல் அளிக்கப்பட்டுள்ளது.

விசாரணை நடத்துவதாக கூறி அமலாக்கத்துறை மனிதாபிமானமற்ற முறையில் நடந்து கொண்டது. அமலாக்கத்துறை அதிகாரிகள் சுப்ரீம்கோர்ட்டின் உத்தரவுகளை பின்பற்றவில்லை. கவர்னரை தொடர்ந்து எதிர்த்து வந்ததால் அமைச்சர் பொன்முடி மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அமலாக்கத்துறை அதிகாரிகளி கேள்விகளுக்கு அமைச்சர் பொன்முடி பொறுமையாக பதிலளித்தார்" என்று அவர் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்