அமைச்சர் செந்தில்பாலாஜி வீட்டில் மனித உரிமை மீறும் வகையில் அமலாக்கத்துறை சோதனை -ஆர்.எஸ்.பாரதி
|அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் மனித உரிமையை மீறும் வகையில் அமலாக்கத்துறை சோதனை நடைபெறுகிறது என்று ஆர்.எஸ்.பாரதி கூறினார்.
சென்னை,
சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் இல்லத்தில் நேற்று அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்த நிலையில் செந்தில் பாலாஜியை சந்திக்க அனுமதிக்கக்கோரி தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, எழும்பூர் தொகுதி எம்.எல்.ஏ. பரந்தாமன் ஆகியோர் செந்தில்பாலாஜியின் இல்லத்திற்கு நேற்று மாலை 3.30 மணி அளவில் வருகை தந்தனர்.
வீட்டுக்கு உள்ளே செல்ல அதிகாரிகள் மறுத்ததால் சோதனை நடைபெறும் வீட்டிற்குள் அனுமதிக்கவில்லை. என்றாலும், வாயிலில் காத்திருக்கும் தங்களை வந்து சந்திக்க அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு அனுமதி வழங்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்த நிலையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதற்கும் அனுமதி வழங்கவில்லை. உடனே அவர் திரும்பினார்.
மனித உரிமை மீறல்
பின்னர் ஆர்.எஸ்.பாரதி, நிருபர்களிடம் கூறியதாவது:-
முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா குறித்த அண்ணாமலையின் கருத்தால் அ.தி.மு.க.-பா.ஜ.க. இடையில் எழுந்துள்ள பிரச்சினையை திசை திருப்பும் வகையில் இந்த சோதனை நடைபெறுகிறது. அமைச்சர் செந்தில்பாலாஜியின் இல்லத்தில் தற்போது நடைபெறும் சோதனை மூலம் அ.தி.மு.க. ஆட்சியில் நடந்த முறைகேட்டை தி.மு.க. ஆட்சியில் நடைபெற்ற முறைகேடு போல காட்ட முற்படுகின்றனர்.மனித உரிமையை மீறும் வகையில் இந்த சோதனை நடைபெறுகிறது. அமைச்சர் செந்தில்பாலாஜியை சந்திக்க வழக்கறிஞர்களான எங்களுக்கே அனுமதி வழங்கப்படவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.