விழுப்புரம்
அமைச்சர் பொன்முடி வீட்டில் சோதனை:தி.மு.க.வினர் சாலை மறியல் செய்ய முயன்றதால் பரபரப்பு
|அமைச்சர் பொன்முடி வீட்டில் சோதனைை யை கண்டித்து தி.மு.க.வினர் சாலை மறியல் செய்ய முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
விழுப்புரத்தில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடியின் வீடு மற்றும் அவர் தொடர்புடைய இடங்களில் நேற்று அமலாக்கத்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர். இதையறிந்த அவரது வீடு முன்பும் மற்றும் விழுப்புரம் கிழக்கு புதுச்சேரி சாலையில் உள்ள நகர தி.மு.க. அலுவலகம் முன்பும் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் ஏராளமானோர் திரண்டனர்.
இவர்கள் அனைவரும் காலை 11 மணியளவில் அங்குள்ள மெயின்ரோட்டுக்கு திரண்டு வந்தனர். அமைச்சர் வீட்டில் சோதனை நடத்தும் அமலாக்கத்துறை அதிகாரிகளை கண்டித்து அவர்கள் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையறிந்ததும் அங்கு வந்த தி.மு.க. மாவட்ட செயலாளர் நா.புகழேந்தி எம்.எல்.ஏ., டாக்டர் லட்சுமணன் எம்.எல்.ஏ., மாநில விவசாய தொழிலாளர் அணி செயலாளர் அன்னியூர் சிவா, மாவட்ட அவைத்தலைவர் ஜெயச்சந்திரன், பொருளாளர் ஜனகராஜ், முன்னாள் எம்.எல்.ஏ. புஷ்பராஜ், நகர செயலாளர் சக்கரை, மாவட்ட துணை செயலாளர் தயா.இளந்திரையன் ஆகியோர் அங்கிருந்த கட்சி நிர்வாகிகள், தொண்டர்களிடம் யாரும் எதுவும் செய்ய வேண்டாம், என்ன நடக்கிறது என்று பார்ப்போம், அதுவரை பொறுத்திருங்கள். அதன்பின் என்ன செய்யலாம் என்று முடிவெடுப்போம். அதுவரை பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் எந்தவித இடையூறும் ஏற்படாத வகையில் அனைவரும் அமைதியான முறையில் இருக்கும்படி கேட்டுக்கொண்டனர். அதன் பிறகு கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் அனைவரும் தங்களது போராட்ட முடிவை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பான சூழ்நிலையே நிலவியது.