< Back
மாநில செய்திகள்
விழுப்புரத்தில்அமைச்சர் பொன்முடியின் வீடு உள்ளிட்ட 4 இடங்களில் அமலாக்கத்துறை சோதனைமுக்கிய ஆவணங்கள் சிக்கின
விழுப்புரம்
மாநில செய்திகள்

விழுப்புரத்தில்அமைச்சர் பொன்முடியின் வீடு உள்ளிட்ட 4 இடங்களில் அமலாக்கத்துறை சோதனைமுக்கிய ஆவணங்கள் சிக்கின

தினத்தந்தி
|
18 July 2023 12:15 AM IST

விழுப்புரத்தில் உள்ள அமைச்சர் பொன்முடியின் வீடு உள்ளிட்ட 4 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர். இதில் முக்கிய ஆவணங்கள் சிக்கின.


தமிழக உயர்கல்வித்துறை அமைச்சராகவும், தி.மு.க. மாநில துணை பொதுச்செயலாளராகவும் இருப்பவர் க.பொன்முடி. இவர் கடந்த 2006-ம் ஆண்டில் வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்ததாக விழுப்புரம் லஞ்ச ஒழிப்பு போலீசார் தொடர்ந்த வழக்கு விசாரணை விழுப்புரம் கோர்ட்டில் நடந்து வந்தது. பின்னர் இவ்வழக்கு விசாரணை வேலூர் கோர்ட்டுக்கு மாற்றப்பட்ட நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு அவ்வழக்கிலிருந்து அமைச்சர் பொன்முடி விடுதலை செய்யப்பட்டார்.

மேலும் கடந்த 1996-ம் ஆண்டு முதல் 2001-ம் ஆண்டு வரை போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்த பொன்முடி, சென்னை சைதாப்பேட்டை ஸ்ரீநகரில் உள்ள வடக்கு காலனி பகுதியில் தனது அதிகாரத்தை பயன்படுத்தி 3,650 சதுரடி நிலத்தை அபகரித்ததாக குற்றம் சாட்டப்பட்டது. இதுதொடர்பாக அவர் மீது நில அபகரிப்பு வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கு விசாரணை கடந்த 20 ஆண்டுகளாக நடந்து வந்த நிலையில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு அவ்வழக்கில் இருந்து அமைச்சர் பொன்முடியை விடுதலை செய்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

அரசுக்கு ரூ.28¼ கோடி வருவாய் இழப்பு

இந்நிலையில் கடந்த 2006- 2011-ல் தி.மு.க. ஆட்சிக்காலத்தின்போது, விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே பூத்துறை கிராமத்தில் உள்ள செம்மண் குவாரிகளில் அரசு சார்பில் ஒப்பந்தம் விடப்பட்டு செம்மண் அள்ளப்பட்டது. அப்போது உயர்கல்வித்துறை மற்றும் சுரங்கம், கனிமவளத்துறை அமைச்சராக பதவி வகித்த பொன்முடி, தனது அதிகாரத்தை பயன்படுத்தி அளவுக்கு அதிகமாக அதாவது அனுமதியை மீறி 2 லட்சத்து 64 ஆயிரத்து 644 லோடு லாரிகளில் செம்மண் எடுத்ததாகவும், இதன் மூலம் அரசுக்கு 28 கோடியே 36 லட்சத்து 40 ஆயிரத்து 600 ரூபாய் இழப்பை ஏற்படுத்தியுள்ளதாகவும் குற்றம் சாட்டப்பட்டது.

இதுதொடர்பாக அமைச்சர் பொன்முடி, அவரது மகனும் கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான பொன்.கவுதமசிகாமணி, ராஜமகேந்திரன், சதானந்தன், கோதகுமார், ஜெயச்சந்திரன், கோபிநாத், லோகநாதன் ஆகிய 8 பேர் மீது கடந்த 2012-ம் ஆண்டில் விழுப்புரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதில் லோகநாதன் ஏற்கனவே உடல்நலக்குறைவால் இறந்துவிட்ட நிலையில் மற்ற 7 பேரின் மீதான வழக்கு விசாரணை தற்போது விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

செம்மண் குவாரி வழக்கு

இவ்வழக்கு பொய்யாக ஜோடிக்கப்பட்ட வழக்கு என்றும், இதனை ரத்து செய்யக்கோரியும் பொன்.கவுதமசிகாமணி எம்.பி., சென்னை உயர்நீதிமன்றத்தில் ஏற்கனவே மேல்முறையீடு செய்த நிலையில் அம்மனுவை தள்ளுபடி செய்த உயர்நீதிமன்றம், விழுப்புரம் கோர்ட்டிலேயே தொடர்ந்து செம்மண் குவாரி வழக்கு விசாரணையை நடத்தலாம் என்று உத்தரவிட்டது.

இதன் அடிப்படையில் செம்மண் குவாரி வழக்கு விசாரணை விழுப்புரம் கோர்ட்டில் தொடர்ந்து நடந்து வருகிறது. அமைச்சர் பொன்முடி ஏற்கனவே தன் மீதான 2 வழக்குகளில் இருந்து விடுதலை செய்யப்பட்ட நிலையில் செம்மண் குவாரி வழக்கு மட்டுமே நிலுவையில் இருந்து வருகிறது.

அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை

இந்நிலையில் நேற்று சென்னை சைதாப்பேட்டை ஸ்ரீநகர் காலனியில் உள்ள அமைச்சர் பொன்முடியின் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். சென்னையில் உள்ள அவரது வீடு மட்டுமின்றி அவருக்கு சொந்தமான அலுவலகம் உள்ளிட்ட பிற இடங்களிலும் இந்த சோதனை நடந்தது.

விழுப்புரம் கிழக்கு சண்முகபுரம் காலனியில் உள்ள பொன்முடியின் வீட்டுக்கு நேற்று காலை 7.15 மணியளவில் ஒரு பெண் அதிகாரி உள்பட 8 பேர் கொண்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் குழுவினர் 2 கார்களில் வந்தனர். அவர்களுடன் மத்திய பாதுகாப்பு படையினரும் வந்தனர். அப்போது அமைச்சர் மற்றும் அவரது குடும்பத்தினர் அனைவரும் சென்னையில் உள்ள வீட்டில் இருந்தனர். இதனால் விழுப்புரம் வீடு பூட்டிக்கிடந்ததால் அமலாக்கத்துறை அதிகாரிகள் அங்கேயே காத்திருந்தனர்.

பின்னர் அமைச்சர் பொன்முடியின் வீட்டு உதவியாளரான செல்வத்திடம் சாவியை பெற்ற அமலாக்கத்துறை அதிகாரிகள், காலை 8.10 மணியளவில் கதவை திறந்து உள்ளே சென்று சோதனையை தொடங்கினர்.

ஒவ்வொரு அறையாக...

அங்கு வீட்டின் ஒவ்வொரு அறையாக அமலாக்கத்துறையினர் தீவிர சோதனை நடத்தினர். வீட்டில் உள்ள பீரோக்கள், அலமாரிகள் உள்ளிட்ட அனைத்தையும் திறந்து சோதனை நடத்தினர். காலை 8.10 மணி முதல் அமைச்சரின் வீட்டின் கீழ்தளத்தில் 4 மணி நேரமாக அதிகாரிகள் சோதனை நடத்திய நிலையில் பின்னர் பகல் 12.15 மணி முதல் வீட்டில் உள்ள முதல் தளத்திற்கு சென்று அங்குள்ள அறைகளில் சோதனையை தொடங்கினர். பொன்முடியின் வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த காரையும் திறந்து சோதனை செய்தனர்.

அமைச்சர் பொன்முடி மீதான சொத்து குவிப்பு வழக்கு மற்றும் நில அபகரிப்பு வழக்கில் இருந்து அவர் விடுதலை செய்யப்பட்ட நிலையில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வரும் செம்மண் குவாரி வழக்கில் சட்டவிரோதமாக பணப்பரிமாற்றம் நடந்திருக்கலாமா? என்ற கோணத்தின் அடிப்படையில் இந்த அதிரடி சோதனை நடந்து வருவதாக கூறப்படுகிறது.

சூர்யா கல்லூரி, ஏஜென்சியிலும் சோதனை

அமைச்சர் பொன்முடியின் வீட்டில் சோதனை நடந்து வரும் அதே வேளையில் அவரது மகன் பொன்.கவுதமசிகாமணி எம்.பி.க்கு சொந்தமான விக்கிரவாண்டியில் உள்ள சூர்யா பொறியியல் கல்லூரியிலும், மற்றும் கல்லூரி வளாகத்தில் கயல் பொன்னி அன் கோ என்ற பெயரில் இயங்கி வரும் சிமெண்டு தயாரிக்கும் நிறுவன அலுவலகத்திலும், விழுப்புரம் பூந்தோட்டம் பாதையில் உள்ள கயல் பொன்னி ஏஜென்சி நிறுவனத்திலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் தனித்தனி குழுக்களாக பிரிந்து சென்று அதிரடி சோதனை நடத்தினர்.

ஏற்கனவே அன்னிய செலவாணி வழக்கில் பொன்.கவுதமசிகாமணி எம்.பி.யின் பல கோடி மதிப்புள்ள சொத்துக்கள், பணத்தை அமலாக்கத்துறை முடக்கி வைத்துள்ள நிலையில் அந்த வழக்கு தொடர்பாகவும் இந்த சோதனை நடைபெற்றதாக கூறப்படுகிறது. விழுப்புரத்தில் 4 இடங்களில் நடைபெற்ற சோதனையில் முக்கிய ஆவணங்கள், அமலாக்கத்துறையிடம் சிக்கியுள்ளன.

அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு

அமைச்சர் செந்தில்பாலாஜியை தொடர்ந்து சென்னை, விழுப்புரத்தில் அமைச்சர் பொன்முடிக்கு சொந்தமான வீடு, அலுவலகங்களில் அமலாக்கத்துறை நடத்திய சோதனை, தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்